வடமாநில தொழிலாளி வெட்டி கொலை; மூவர் கைது
குன்றத்துார்: சோமங்கலம் அருகே 25 வயது வடமாநில தொழிலாளியை, கத்தியால் குத்தி கொலை செய்த மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் குல்ஷன்குமார், 25. குன்றத்துார் அடுத்த காட்டரம்பாக்கத்தில், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி, இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
குல்ஷன்குமாருக்கும், இவருடன் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டோபன் டோலி, 20, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம், தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குல்ஷன்குமார், ஆபாசமான வார்த்தைகளால் டோபன் டோலியை திட்டியுள்ளார்.
அன்று இரவு 9:30 மணிக்கு காட்டரம்பாக்கம் குளக்கரையில் குல்ஷன்குமார் நின்றிருந்தார். டோபன் டோலி, தன் நண்பர்கள் ஆகாஷ் காகுலோரி, 19, பாபு கான் துமாரி, 20, ஆகியோருடன் அங்கு சென்றார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் ஆத்திரமடைந்த டோபன் டோலி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தியதில் குல்ஷன்குமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், குல்ஷன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டோபன் டோலி உள்ளிட்ட மூவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.