Politics
சிக்கண்ணா கல்லுாரி உருவான வரலாறு
தன்னாட்சி அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்து வரும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லுாரிகளுக்குப் பின்னால், திருப்பூர் மக்களின் பங்களிப்பும், சிலரின் தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது.
இவை உருவான வரலாறு குறித்து, முன்னாள் திருப்பூர் எம்.எல்.ஏ., துரைசாமி கூறியதாவது:
1967ல் நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றபோது, அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது புதிய அரசு கல்லுாரி அமைக்க, பொதுமக்கள் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாய் அரசுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
கோவை கலெக்டர் அம்புரோஸ் தலைமையில் திருப்பூரில் தொழிலதிபர்கள், வியாபாரிகளிடம் நிதி திரட்டப்பட்டது. பலரும் தங்களால் இயன்ற தொகையை வழங்கினர். நானும் எனது மாத சம்பளமான 250 ரூபாயை கல்லுாரி நிதிக்காக அளித்தேன்.
தொடர்ந்து, மில் உரிமையாளர்களிடம் பேசி நிதி திரட்டப்பட்டது. சிக்கண்ண செட்டியார் பெயரில் கல்லுாரி அமைக்க ஒப்புதல் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் வழங்கினர். அதன்படி அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சிக்கண்ணா அரசு கல்லுாரி உருவானது.
1969 மே 22ல் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், 1971 செப்., 30ல் நாவலர் நெடுஞ்செழியன் கல்லுாரியை திறந்து வைத்தார். அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் இரண்டாவது அரசு கலைக் கல்லுாரி இதுவாகும்.
எல்.ஆர்.ஜி., கல்லுாரி எப்படி உருவானது?
''1967 தேர்தலின்போது, திருப்பூர் கொங்கு நகரைச் சேர்ந்த எல்.ஆர்.ஜி. நாயுடுவின் ஆதரவை நாடினேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவரது தாயார் பெயரில் பள்ளி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதன்படி, கொங்கு நகரில் சின்னசாமி அம்மாள் பெயரில் பள்ளி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, 1972ல் எல்.ஆர்.ஜி. நாயுடுவின் குடும்பத்தினரிடம், அவரது பெயரில் திருப்பூரில் பெண்கள் கல்லுாரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று, தற்போதைய கல்லுாரி அமைந்துள்ள இடத்தையும், தேவையான நிதியையும் குடும்பத்தினர் வழங்கினர்.
கட்டுமானப் பணிகள் முடிந்து, 1974 அக்., 31ல் நெடுஞ்செழியன் கல்லுாரியைத் திறந்து வைத்தார். அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் அமைந்த ஒரே அரசு மகளிர் கல்லுாரி எல்.ஆர்.ஜி., என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார் முன்னாள் எம்.எல்.ஏ. துரைசாமி.