Politics
பிரதமர் மோடிக்கு நிகராக இந்தியாவில் யாருமே கிடையாது சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
சிவகாசி: ''பிரதமர் மோடிக்கு நிகராக இந்தியாவில் யாருமே கிடையாது '', என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்தங்கலில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., -தி.மு.க., - த.வெ.க., ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா ஆட்சிகளிலும் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். தவறான அதிகாரிகளும் இருக்கிறார்கள். அதனால் ஒட்டுமொத்தமாக சென்ற திராவிட ஆட்சி காலத்தில் ஊழல் நடந்துள்ளதாக சொல்வது ஏற்புடையதல்ல. தற்போதும் ஆங்காங்கே தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அளவில் அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் தாங்கள் சார்ந்துள்ள தலைவர்களை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும், முதல்வராகவும் கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். அதை யாரும் தடுக்க முடியாது. அதுபோல விஜயின் ரசிகர்கள் அவர் முதல்வராகிவிட்ட காரணத்தினால், அடுத்து அவரை பிரதமர் என கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமராக உள்ள மோடி வலுவான தலைமையில் இருக்கிறார். அவரை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.
உலகம் வியக்கின்ற, உலக தலைவர்கள் போற்றுகின்ற, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச விரும்புகின்ற பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு நிகராக இணையாக, சொல்லக்கூடிய அளவிற்கு இந்தியாவில் யாருமே கிடையாது. காங்கிரசிற்கும் த.வெ.க., விற்கும் உள்ள கூட்டணி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போட்டுள்ள முடிச்சுதான். எந்த நேரத்திலும் கழண்டுவிடும். பிரச்னையாகி விலகிவிடுவார்கள். இந்த ஆட்சி சூழ்நிலையால் உருவாக்கப்பட்டது என்றார்.