லஞ்சம் -சிக்கிய திமிங்கலங்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பிரதாப். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டியில் கிரஷர் ஆலை நடத்திவருகிறார். ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதிவேண்டி, ஓசூரிலுள்ள மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவல கத்தில் விண்ணப்பித்தார்.
அங்கு மாவட்டப் பொறியாளராக பணியாற்றி வந்த புருசோத்தமன், அனுமதி சான்றிதழ் (சி.டி.இ.) தருவதற்கு ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக 10 லட்ச ரூபாய்க்கு ஒப்புக்கொண்டுள்ளார். முதல்கட்டமாக 3 லட்ச ரூபாய் தருவதாகவும், அனுமதி சான்றிதழ் கைக்கு வந்தபிறகு மீதப்பணத்தைத் தருவதாகவும் பிரதாப் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ஜெய்குமாரிடம் புகாரளித்தார். இதையடுத்து செப். 2-ஆம் தேதி, ரசாயன பவுடர் தடவிய 3 லட்ச ரூபாயை பிரதாப்பிடம் கொடுத்தனுப்பினர். பொறியாளர் புருசோத்தமன், மாமூல் வசூலுக்கென்று சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமாரை இடைத்தரகராகப் பயன்படுத்திவந்துள்ளார். அதனால் பணத்தை சிவக் குமாரிடம் கொடுத்துவிடும் படி பிரதாப்பிடம் கூறியிருக்கிறார்.
அதன்படி, ஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வைத்து பொறியாளர் புருசோத்தமனிடம், இடைத்தரகர் சிவக்குமார் மூலமாக பணத்தைக் கொடுத்தார் பிரதாப். அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், புருசோத்தமனை கையும்களவுமாக கைதுசெய்தனர். இடைத்தரகர் சிவக்குமாரும் சிக்கினார். மறுநாள் சேலத்தில் வைத்து சிவக்குமாரின் உதவியாளர் முருககிருஷ்ணன் என்பவரையும் கைதுசெய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை, கடலூரி லுள்ள புருசோத்தமனின் வீடு, சேலத்திலுள்ள சிவக்குமாரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். டி.எஸ்.பி. ஜெய்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவி, நரேந்திரன், ரவிக்குமார் கொண்ட மூன்று குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். புருசோத்தமனின் சென்னை வீட்டிலிருந்து 6 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இடைத்தரகர் சிவக்குமார் வீட்டிலிருந்து
4 கிலோ தங்கக்கட்டிகள், 27.10 லட்சம் ரூபாய் ரொக்கம், 300 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடி ரூபாய். இவை தவிர, 20 முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.
இதுகுறித்து கிரஷர் ஆலை உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். "சுற்றுச்சூழல் பொறியாளர் புருசோத்தமன் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு ஃபைலையும் நகர்த்தமாட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ள இடைத்தரகர் சிவக்குமார்தான், சாயப்பட்டறைகள், ஜவுளி உற்பத்தியாளர்கள், குவாரி, கிரஷர் ஆலை அதிபர்களிடமிருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாமூல் வசூலித்துக் கொடுக்கும் மெயின் ஏஜன்ட். புருசோத்தமன், சேலத்தில் பணியாற்றிய போதிருந்தே இருவருக்கும் நல்ல நெருக்கம். மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்பான கோப்புகள் அனைத்தும்
சிவக்குமார் மூலமாகத் தான் நகரும். துறை தொடர்பான முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், இந்தத் துறையில் 25 ஆண்டாக சிவக்குமார் வைத்ததுதான் சட்டம். எல்லா டீலிங்கும் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிவக்குமார்.
இந்த வழக்கில்கூட புகார்தாரர் பிரதாப்பிடம், "பொறியாளர் புருசோத்தமன் விரைவில் வேலூர் மண்டல இணைகமிஷனர் ஆகிவிடுவார். மாநில சுற்றுச்சூழல்துறை உறுப்பினர் செயலராகவும் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. அவரை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்' என்று சிவக்குமார் மூளைச்சலவை செய்து பேரம் பேசியிருக்கிறார்'' என்கிறார்கள் கிரஷர் உரிமையாளர்கள்.
சிவக்குமாரால் பாதிக்கப்பட்ட சேலம் குகையைச் சேர்ந்த மணிமாறன் கூறுகையில், "இரண்டு ஆண்டிற்கு முன்பு, சாயப்பட்டறை நடத்த அனுமதிகேட்டு, சேலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் மாவட்டப் பொறியாளராக இருந்த செந்தில்விநாயகத்திடம் விண்ணப்பித்திருந்தேன். அவரும், இடைத்தரகர் சிவக்குமாரிடம்தான் பேசும்படி சொன்னார்.
3 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் மின் இணைப்பு கொடுக்கமுடியும் என்று லஞ்சம் கேட்டனர். இதுகுறித்து அப்போதே உரிய ஆதாரங்களுடன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தேன். அன்று சிக்காத சிவக்குமார் இப்போது மாட்டிக்கொண்டார். அதிகாரிகளுக்கு பணம் வசூலித்துக்கொடுப்பது மட்டுமின்றி, "சகலவிதமான' சேவைகளும் செய்துகொடுத்து, எல்லோரையும் தன் பிடியில் வைத்திருக்கிறார். தாசநாயக்கன்பட்டியில் 2500 ச.அடி பரப்பளவில் 'பார்' வசதியுடன் பல கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டியிருக்கிறார். கவுரிசங்கர், கண்மணி ராஜா ஆகிய இரு பினாமிகள் மூலம் விதிகளைமீறி சாய ஆலைகளை நடத்திவருகிறார்'' என்கிறார்.
சிவக்குமார் மற்றும் அப்போதைய பொறியாளர் செந்தில்விநாயகம் ஆகியோரின் தகிடுதத்தங்கள் குறித்து, 2024, மே 08-11 நாளிட்ட நக்கீரன் இதழில், "அமைச்சர் பெயரில் கல்லா கட்டும் அதிகாரி! லீக்கான ஆடியோ!' என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டி ருந்தோம். அப்போதே போலீசார் சிவக்குமாரை "லாக்' செய்திருந்தால் அவரின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியும் என்கிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்.
இடைத்தரகர் சிவக்குமார் வீட்டிலிருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், நகைகள், பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் லஞ்ச ஒழிப்பு போலீசாரையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இதையடுத்து, அவரின் மொத்த நெட்வொர்க்கையும் தோண்டித் துருவ ஆயத்தமாகியிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)