மாணவர்களே ரெடியா.? - ரிமோட் கார் ரேஸ் முதல் கிளே மாடலிங் வரை... நெல்லையில் 3 நாள் விழா

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தனுஷிரி வென்ச்சர் இணைந்து நடத்தும் தேசிய பொறியாளர்கள் தின விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் சென்னை தனுஷிரி வென்ச்சர் இணைந்து தேசிய பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. செப்டம்பர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியை கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானியும், திட்ட இயக்குநருமான ஆபிரகாம் ஜேக்கப் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, தேசிய பொறியாளர்கள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் மாரி லெனின் கூறுகையில், நாட்டின் கட்டமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சியில் பொறியாளர்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பை போற்றும் வகையிலேயே தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சிகள் மூலம் புதிய அறிவியல் கோட்பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றனர். அவற்றை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் தொழில்நுட்பங்களாக மாற்றுவதில் பொறியாளர்களின் பங்கு முக்கியமானது என்றார்.
மேலும், எதிர்காலத்தில் நாடு எந்த தொழில்நுட்பப் பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவே, தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடமும், குறிப்பாக மாணவர்களிடமும் அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் புதிய சிந்தனை மற்றும் படைப்பாற்றலுடன் பொறியியல் துறையில் காலடி எடுத்து வைத்து, சமூகத்தில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பேப்பர் பிரசன்டேஷன், ரிமோட் கண்ட்ரோல் கார் ரேஸ், போர்ட்ரெய்ட் டிராயிங், கிளே மாடலிங், ரங்கோலி மற்றும் அதிக வலுதாங்கும் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சிகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், சிறப்பாக திறமையை வெளிப்படுத்தும் பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்களிடையே அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் மீதான ஆர்வத்தை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
