புத்தகங்களின் வழியே ஒரு வைகறை!

தமிழ் இலக்கிய உலகில் சிலர் தாங்கள் எழுதிய நூல்களால் நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் பிறர் எழுதிய நூல்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். இந்த இரு பண்புகளையும் தன்னுள் கொண்டிருந்தவர் வைகறைவாணன். முன்னணி பதிப்பாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளர், சிந்தனையாளர், இதழியல் ஆர்வலர், சமூகச் செயல்பாட்டாளர் எனப் பல தளங்களில் இயங்கியவர். 2026, ஆகஸ்ட் 1 அன்று அவரது மறைவு தமிழ் அறிவுலகுக்கேயான இழப்பாகும்.
திருவையாறு அரசர் கல்லூரியில் கல்வி பயின்ற வைகறைவாணனின் அறிவுலகப் பயணத்துக்கு அவ ரது நட்பு வட்டம் முக்கியமான பின்னணியாக அமைந்தது. கைலாசம், மருது, பேராசிரியர் இளவரசு, பெரியாரியக்கத் தொண்டர் குருவிக்கரம்பை சு.வேலு உள்ளிட்டோருடனான தொடர்புகள் அவரது சிந்தனைப் பரப்பை விரிவுபடுத்தின. 1982-ல் "கார்க்கி நூலகம்' என்ற பதிப்பக முயற்சியைத் தொடங்கி, வி.பி. சிந்தனின் "இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துகள்' நூலை வெளியிட்டது அவரது பதிப்புலகப் பயணத்தின் முக்கியமான தொடக்கமாக அமை ந்தது.
பின்னர் "பொன்னி', "சாளரம்' ஆகிய பதிப்பகங்களின் வழியாக 70-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டார். ஏ.கே. செட்டியாரின் குடகு, கல்கியின் தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி போன்ற அரிய நூல்களை மறுபதிப்பாகக் கொண்டுவந்தார். வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள், ஏழாவது ஊழி, தோல்விகளின் ஒப்புதல், இன்குலாபின் ஒவ்வொரு புல்லையும், பூமணியின் முழுச் சிறுகதைகளைக் கொண்ட அம்பாரம் உள்ளிட்ட படைப்புகள் அவரது பதிப்புப் பார்வையின் பரப்பை உணர்த்துகின்றன.
வைகறைவாணனின் பதிப்புப் பணி, வெறும் தொழிலாக இருக்கவில்லை. "நான் படிப்பதற்காக நானே பதிப்பித்துக்கொண்ட நூல்கள்தான் நான் வெளியிட்ட நூல்கள்' என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். லாபலிநட்டக் கணக்கில் தன்னை "படுதோல்வியடைந்த பதிப்பாளன்' என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டாலும், அறிவு வளர்ச்சியை உருவாக்குவதுதான் பதிப்பாளரின் உண்மையான வெற்றி என்பதை அவரது வாழ்வே நிரூபித்தது.
படைப்பாளியாகவும் அவர் தனித்த அடையாளம் பெற்றிருந்தார். பொதுவுடமைச் சிந்தனை, தமிழ்த் தேசியம், சமூக நீதி போன்ற தளங்களில் அவரது எழுத்துகள் பயணித்தன. திணை, தேசியம் போன்ற நூல்களுக்கு அவர் எழுதிய பதிப்புரைகள் அவரது வாசிப்பு, சிந்தனை, கருத்தியல் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன. மேலும், "காக்கைச் சிறகினிலே' போன்ற இதழ்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு, இளம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்களை இணைக்கும் அறிவுச் சூழலை உருவாக்குவதிலும் அவரது பங்கைக் காட்டுகிறது.
2016-ல் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது பொதுவுடமை சார்ந்த படைப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒரு நூலகம் உருவாகவேண்டும் என்ற அவரது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
வைகறையின் கவிதைகளைப் பார்க்கும்போது, அவற்றில் முதலில் கண்ணில் படுவது எளிமை. ஆனால் அந்த எளிமை சாதாரணமானது அல்ல. அன்றாட வாழ்க்கையின் மிகச் சிறிய காட்சிகளுக்குள்ளிருந்தே கவிதையைக் கண்டெடுக்கும் பார்வை அவரிடம் இருந்தது. ஒரு மெழுகுவர்த்தி
அணைக்கப்படும் காட்சியைக்கூட "இரவாக்குகிறான் இரவை' என்று கவித்துவமாக மாற்றும் திறன் அவருடையது.
அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பான "ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்' இன்னொரு வைகறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அந்தத் தொகுப்பின் பெரும்பகுதி அவரது மகன் ஜெய்குட்டியை மையமாகக் கொண்டிருந்தாலும், அது வெறும் தந்தைப் பாசத்தின் பதிவாக மட்டும் நின்றுவிடவில்லை. குழந்தையின் பார்வையின் வழியாக உலகத்தைப் புதிதாகக் கண்டறியும் ஒரு பெரியவரின் பயணமாக அது மாறுகிறது. பொம்மைகள், கிறுக்கல்கள், செடி, பறவை, புத்தகம், மழை, பாத்திரத்தின் ஓசை-இவையனைத்தும் குழந்தையின் வழியாக கவிதையின் பொருள்களாகின்றன.
இதில்தான் வைகறையின் கவிதை மதிப்பீடு வெளிப்படுகிறது. குழந்தைமை அவருக்கு வெறும் வயது சார்ந்த நிலை அல்ல; அது உலகை மாசற்றுப் பார்க்கும் ஒரு மனநிலை. குழந்தை மொழியைக் கற்கும்போது பொம்மைகளின் மொழியும், கிறுக்கல்களின் மொழியும், செடியின் மொழியும் புரியத் தொடங்குகிறது என்ற அவரது கவிதைப் பார்வை, மனிதன் இழந்துகொண்டிருக்கும் இயற்கையான உணர்வுகளை மீண்டும் தேடுகிறது. பெரியவர்களின் உலகம் மறந்துவிட்ட பல மொழிகளை குழந்தை இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது என்பதே அதன் அடிப்படை நம்பிக்கை.
அவருடைய கவிதைகளில் உறவுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மதிப்பு குறிப்பிடத்தக்கது. தந்தை-மகன் உறவு அவரது கவிதைகளில் பாசத்தின் வெளிப்பாடாக மட்டும் வருவதில்லை; அந்த உறவு கவிஞனுடைய உலகப் பார்வையையே மாற்றுகிறது. இரண்டு முத்தங்கள் ஒருவரை “பாதி கடலாகவும்; பாதி வானமாகவும் மாற்றிவிடுகின்றன என்ற கற்பனை, குழந்தையின் மீது கொண்ட அன்பை இயற்கையின் அளவுக்கு விரிவுபடுத்துகிறது.
இதே மனிதநேயம் அவரது இலக்கியச் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டது. ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டு அதை எழுதியவரைத் தொடர்புகொண்டு பாராட்டாமல் அவரால் இருக்கமுடியாது என்று அவருடன் நெருக்கமாக இருந்த இரா. பூபாலன் பதிவுசெய்கிறார்.
தமிழ்நாட்டின் பல்வேறு இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று, புதிய படைப்பாளிகளுடன் பழகி, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடைய நூல்களைப் பற்றிப் பேசுவது வைகறையின் வழக்கமாக இருந்திருக்கிறது. இலக்கியத்தை தனக்கான மேடையாக அல்லாமல், பலரையும் மேடையேற்றுவதற்கான இடமாக அவர் பார்த்தார்.
அதனால்தான் வைகறையின் மதிப்பீட்டில் "நான்' என்பதைக் காட்டிலும் "நாம்' என்பது வலிமையாக இருந்திருக்க வேண்டும். புதிய படைப்பாளிகள் வெளிவருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினார். வைகறையின் மற்றொரு முக்கியமான பண்பு புதியவர்களைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை.
இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றவர்களிடம் மட்டும் சென்று நிற்காமல், எழுதத் தொடங்கியவர்களிடமும் அவர் அதே உற்சாகத்துடன் உரையாடி னார். ஒரு நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு இருந்த மகிழ்ச்சி, தானே ஒரு நல்ல கவிதை எழுதுவதற்கான மகிழ்ச்சிக்கு நிகரானதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவரது நண்பர்களின் நினைவுகளில் வைகறை ஒரு கவிஞராக மட்டுமல்ல, கவிதையைக் காத லித்த மனிதராகவும் தொடர்ந்து வாழ்கிறார்.
ஒரு மனிதனின் இலக்கியப் பங்களிப்பை அவன் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையால் மட்டும் அளக்கமுடியாது. அவன் எத்தனை பேரை எழுதத் தூண்டினான், எத்தனை நல்ல கவிதைகளைக் கண்டுபிடித்து பிறரிடம் கொண்டுசேர்த்தான், எத்தனை புதிய குரல்களுக்கு இடம் உருவாக்கினான் என்பதாலும் அளக்கவேண்டும். அந்த அளவுகோலில் வைகறையின் வாழ்க்கை மிகப் பெரியது. அவர் எழுதிய கவிதைகளைவிட, கவிதைக்காக அவர் உருவாக்கிய உறவுகளும் அவர் விதைத்த இலக்கிய ஆர்வமும் நீண்ட காலம் வாழக்கூடியவை.
வைகறைவாணன் புத்தகங் களை விற்பனைக்கான பொருள்களாகப் பார்க்கவில்லை; அவற்றை சிந்தனையைப் பரப்பும் கருவிகளாகப் பார்த்தார். அதனால் அவரது மறைவு ஒரு பதிப்பாளர் மறைவு மட்டுமல்ல. புத்தகத்தின் வழியாக சமூகத்துடன் உரையாடிய ஒரு தலைமுறையின் குரல் மெல்ல அடங்கியிருக்கும் தருணம். அவர் வெளியிட்ட நூல்களிலும், அவர் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களிலும், அவர் உருவாக்கிய வாசிப்பு மரபிலும் அந்த வைகறை தொடர்ந்து ஒளிரும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)