Arts, culture, entertainment and media
1,000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதை ரகங்கள்!
மரபு ரக விதைகளைப் பகிர்வு செய்யும் பணியை இந்தியா முழுவதும் பரவலாக மேற்கொண்டு வருகிறேன். விதைகளை ஒரு போதும் காசுக்காக விற்கக் கூடாது என்பது என்னுடைய கோட்பாடு.

மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயம், அசத்தும் பிரியா!
`விதைதான் விவசாயிகளின் பேராயுதம்' என்று அடிக்கடி சொல்லி வந்தார், `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார். அவரைப் பின்பற்றி இயற்கை வேளாண்மை செய்துவரும் பலரும் பாரம்பர்ய மரபு விதைகளை மீட்டெடுத் தல், அவற்றைப் பரவலாக்கம் செய்தல் போன்ற மகத்தான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த `விதைத்தீவு' பிரியா ராஜநாராயணன். இவர், 3 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வருவ தோடு 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரக விதைகளைச் சேகரித்து மறு உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் பரவலாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு மாலைப்பொழுதில் பிரியா ராஜநாராயணனைச் சந்தித்தோம். ``நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். எம்.பி.ஏ முடித்து விட்டு, எய்ட்ஸ் மறுவாழ்வு மையத்தில் ஃபைனான்ஸ் மேனேஜராக வேலை பார்த்து வந்தேன். இதற்கிடையில், இயற்கை விவசாயம் மற்றும் தற்சார்பு வாழ்வியலில் எனக்கு ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.
வீட்டுத்தோட்டம்!
கடந்த 2007-ம் ஆண்டு, என்னுடைய வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்தேன். அடுத்த சில ஆண்டுகளில், எங்கள் குடும்ப நண்பருக்குச் சொந்த மான இடத்தைச் சுத்தம் செய்து, காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் பயிர் செய்ய ஆரம்பித்தேன். இயற்கை விவசாயத்தின் மீதான, என்னுடைய ஈடுபாட்டைப் பார்த்து, அதைக் கொடுத்து உதவினார்.
கடைகளில் வாங்கிய விதைகள் முளைக்கவில்லை!
ஓய்வு நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் தோட்டத்தில் கவனம் செலுத்தினேன். நான் பணியாற்றிய பைனான்ஸ் மேனேஜர் பணி மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பங்கை இதற்காகச் செலவிடத் தொடங்கினேன். ஆரம்ப காலத்தில் விதைகளைக் கடைகளில்தான் வாங்கினேன். செடிகள் நன்றாகத்தான் வளர்ந்தன. அதிக காய்ப்பும் கிடைத்தது. ஆனால், அதிலிருந்து கிடைக்கப் பெற்ற விதைகளை மீண்டும் மண்ணில் போட்டால் முளைக்கவில்லை. மறுபடியும் கடைகளில் விதைகள் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதுதான், என்னுடைய தீவிரத் தேடல் மூலம் ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்து கொண்டேன். `தற்சார்பு என்பது இயற்கை விவசாயம் செய்வது மட்டுமல்ல… மரபு ரக விதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும்தான்' என முடிவு செய்தேன்.
வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தற்சார்பு விவசாயம்!
அந்தச் சமயத்தில், எனக்கு சிங்கப்பூருக்குப் பணி மாறுதல் கிடைத்தது. அங்கு சென்று பணியாற்றினால், நிறைய சம்பளம் கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும், தற்சார்பு விவசாயத்தின் மீதான ஈர்ப்பு, என்னைத் தடுத்து விட்டது. என்னுடைய முடிவில், என் குடும்பத் தினருக்கு மாற்றுக் கருத்து இருந்தது. சொந்த ஊரிலிருந்து முழுமையாக விவசாயத்தில் ஈடுபட்டால், நம்முடைய குடும்பத்துக்குத் தேவையான பெரும்பாலான உணவுப் பொருள்களை, ரசாயன நச்சுத்தன்மை இல்லாமல் ஆரோக்கியமாக நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதனால் செலவும் குறையும் என அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். என் குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன், தற்சார்பு வேளாண்மையில் முழுமை யாகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன்’’ என்ற பிரியா ராஜநாராயணன் தொடர்ந்தார்...
மரபு விதைகளைத் தேடி பயணம்!
``இனி இதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்த பிறகு, மரபு விதைகளைத் தேடிப் பல பகுதிகளுக்கும் பயணங்கள் மேற் கொள்ள ஆரம்பித்தேன். வெளியூர்களில் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதெல்லாம், அந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களோடு பேசி, மரபு விதைகளை வாங்கி வருவேன். நான், சந்திக்கும் தருணத்தில் அவர்களிடம் நாட்டு விதைகள் இல்லையென்றால், ஒரு கொரியர் கவரில் என்னுடைய விலாசத்தை எழுதி, அவர்களிடம் கொடுத்துவிட்டு வருவேன். அப்படி ஒரு முறை கேரளாவுக்குச் சென்றிருந்த போது ஒரு வீட்டில் நீள நீளமாகக் காட்சியளித்த வேங்கேரி கத்திரிக்காய்களைப் பார்த்தேன். அப்போது, அந்த கத்திரி விதைகள் அவர்களிடம் இல்லை. ஒரு கொரியர் கவரில் என்னுடைய முகவரியை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு சில மாதங்கள் கழித்து அந்த கவரில் ஐந்தாறு விதைகளை அனுப்பியிருந்தார்கள்.
நாடு முழுவதும் விதைப் பரிமாற்றம்!
விருதுநகர் மாவட்ட விவசாயிகளில் பலர், மரபு விதைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து விதை களைச் சேகரித்து வந்தேன். முகநூல், ஸ்கைப் போன்ற சமூக ஊடகங்களின் உதவியோடு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் காய்கறி விதைகளைச் சேகரித்தேன். நான் சாகுபடி செய்து பெருக்கிய விதைகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் மற்றும் மாடித்தோட்ட ஆர்வலர்களிடம் பரிமாற்றம் செய்தேன்.
விதை திருவிழா, உணவுத் திருவிழா, வேளாண் கண்காட்சி போன்ற விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல்… கோயில் திருவிழா, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விஷேசங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் என்னிடம் உள்ள விதைகளைப் பகிர ஆரம்பித்தேன். நாள்கள் செல்லச் செல்ல, நாட்டுரக விதைகளின் எண்ணிக்கையும், சாகுபடி செய்யும் பயிர்களின் வகைகளும் பெருகிக்கொண்டே இருந்தது. இதனால் எங்களுடைய வீட்டுத் தோட்டத்திலும், எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த இடமும் போதுமானதாக இல்லை.
விதைத்தீவு!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு நாட்டு ரகக் காய்கறிகள், பல்வேறு வகையான தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் அரிய வகை மூலிகைகள் போன்றவற்றைப் பயிர் செய்யத் தொடங்கினேன்.
தற்போது சுமார் 1000-க்கும் மேற்பட்ட மரபு ரகங்களைப் பயிர் செய்து வருகிறேன். எங்களுடைய இயற்கை வேளாண் பண்ணைக்கு `விதைத்தீவு' எனப் பெயரிட்டுள்ளேன். அந்தப் பண்ணையை ஒரு திறந்தவெளி பயிற்சிக்கூடமாகவும் பயன்படுத்தி வருகிறேன்.
மரபு ரக விதைகளைப் பகிர்வு செய்யும் பணியை இந்தியா முழுவதும் பரவலாக மேற்கொண்டு வருகிறேன். விதைகளை ஒரு போதும் காசுக்காக விற்கக் கூடாது என்பது என்னுடைய கோட்பாடு. எங்களுடைய பண்ணையில் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் தானியங்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைச் சந்தைப்படுத்துவதன் மூலம் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்கிறேன். விதைகள், எப்போதும் விவசாயிகளின் கையில்தான் இருக்க வேண்டும். அவை, தனியார் நிறுவனங்களிடம் இருப்பதும், விவசாயிகள் அவற்றைச் சார்ந்திருப்பதும் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். இதனால் விவசாயிகள் சந்திக்கும் பின்னடைவுகள் ஏராளம். வருங்காலத்தில், ஊர்தோறும் விதை வங்கிகளை உருவாக்கும் திட்டம் வைத்திருக்கிறேன்.
வாட்ஸ்அப் மூலம் பயிற்சி!
ஒத்த சிந்தனை கொண்ட விருதுநகர் அஜீதா அக்கா, பலராமன் ஐயா போன்றோருடன் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு காலகட்டத்தில் இயற்கை வழி வீட்டுத் தோட்டம் என்னும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கினேன். பயனாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. எங்களுடைய ஒருங்கிணைப்பில் தற்போது 12 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இயற்கை விவசாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை நடத்தும் நிகழ்வுகளுக்கு நேரடியாகச் சென்றும் விவசாயிகளுக்கு பாரம்பர்ய வேளாண்மை பயிற்சிகள் கொடுத்து வருகிறோம்’’ என்ற பிரியா ராஜநாராயணன் நிறைவாக,
``ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால்தான் இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்பதல்ல. கொஞ்சம் மண்ணும், பயன்படுத்தப்பட்ட பழைய பிளாஸ்டிக் வாளிகளும், சிறிது மரபு விதைகளும் இருந்தாலே போதும்’’ என்று சொல்லி விடை கொடுத்தார்.
பிரியா ராஜநாராயணன் சேகரித்து வைத்திருக்கும் பாரம்பர்ய ரகங்கள்!
இவை தவிர... கடுகு, இஞ்சி, கொத்தவரை, கீரை, மலர்கள், மூலிகைகள், தென்னை ஆகியவற்றிலும் பல அரிய ரகங்கள் உள்ளன. நாவல், கொய்யா, மா, பலா, வாழை, இலந்தை உள்ளிட்ட பழ வகைகளிலும் ஏராளமான அரிய ரகங்கள் உள்ளன.
ஆரோக்கியம் மேம்படுகிறது!
“இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பை உருவாக்கி பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் அமைப்பின் முன் முயற்சியின் காரணமாக, ஏராளமான மக்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைத்துள்ளார்கள் எந்த ஒரு மரபு ரக விதைகள் கிடைத்தாலும், அதை வீட்டுத்தோட்டத்தில் பரிசோதனை செய்து, ஓரளவுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தால்தான், அந்த ரகத்தைப் பண்ணையில் பயிர் செய்வேன்.
எங்களுடைய குடும்பத்துக்குத் தேவையான பெரும்பாலான உணவுப் பொருள்களை நானே உற்பத்தி செய்கிறேன். எங்கள் பண்ணையில் நெல் பயிர் செய்வதில்லை. அதனால், துவரை யைக் கொடுத்து பண்ட மாற்று முறையில் பாரம்பர்ய அரிசியை வாங்கிக் கொள் கிறேன். இதனால் உணவுக்கான செலவுகள் தவிர்க்கப்படுவதோடு, எங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த 14 ஆண்டுகளில் எங்கள் குடும்பத்தினர் யாரும் மருத்துவமனைக்கே சென்றதில்லை” என்கிறார், பிரியா ராஜநாராயணன்.
