Politics
‘‘நடிகை த்ரிஷா திருச்சியில் போட்டியிடலாம்!’’
அரசியல் கொள்கைகள், கருத்துகள் சார்ந்து எவ்வளவு விமர்சனங்கள் வேண்டுமானாலும் வைக்கலாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், சோனியா காந்தி குறித்து பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட கருத்துக்கு எதிராகக் கொந்தளித்து, “அவதூறாகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை” என எச்சரித்திருக்கிறார். சமூக ஊடக அரசியலில் காங்கிரஸின் அடுத்தகட்ட வியூகம், தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட கேள்விகளை விஜய் வசந்த்தின் முன் வைத்தோம்.
``அண்ணாமலை போன்று காங்கிரஸில் வார் ரூம் உருவாக்குவீர்களா?’’
``முதற்கட்டமாக ‘சமூக ஊடகப் போராளிகள்’ என்ற பெயரில் 50,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். சமூக வலைதளங்களில் செயல்படுவோர், பேச்சாளர்கள், கன்டென்ட் கிரியேட்டர்ஸ் ஆகியோரை ஒன்றிணைத்து, மண்டல மற்றும் மாவட்ட அளவில் வலிமையான கட்டமைப்பை உருவாக்கி, காங்கிரஸின் கொள்கைகளை மக்களிடம் ஒரே குரலில் எடுத்துச் செல்வோம்.’’
`` `மிசா’ விவகாரத்தில் ஸ்டாலின் குறித்து முதல்வர் விமர்சித்தது தி.மு.க-வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?’’
``அரசியல் கொள்கைகள், கருத்துகள் சார்ந்து எவ்வளவு விமர்சனங்கள் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால், தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதேசமயம், முதல்வர் கூறிய விளக்கம் வேறு, அதை எடுத்துக்கொண்டது வேறாகிவிட்டது. அதை இனியும் பெரிதுபடுத்தத் தேவையில்லை.’’
``ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்பதை விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையே?’’
``ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய தலைவரை முன்னிலைப்படுத்துவார்கள். 2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்ற எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கூட்டணியிலும் உறுதியாக இருக்கிறோம்.’’
``தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி எப்போது அமையும்?’’
``கூடிய விரைவில் அமையும். அதுதான் ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் கனவு. இப்போது தான் அமைச்சரவையில் பங்குபெற்றிருக்கிறோம். இதை எங்கள் முதல் படியாக எடுத்துக்கொண்டு, ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்.’’
``விஜய் தலைமையிலான கூட்டணியில் சேராமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் தனியாகக் களமிறங்கியிருக்கின்றனவே?’’
``மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி, ஒரு வலுவான வெற்றிக் கூட்டணியாகவே அமைந்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய பலமாகத் திகழும். அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் பங்கு வேண்டாம், வெளியிலிருந்து ஆதரிப்பதாக முதலில் கூறினார்கள். இப்போது தனியாக நிற்பதாக அறிவித்திருக்கின்றனர். கம்யூனிஸ்ட்டுகள் நிலையான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கின்றனர்.’’
``திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடப்போவதாகக் கூறுகின்றனரே?’’
``நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தப்பு இருக்கிறது... ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். த்ரிஷாவை த.வெ.க வேட்பாளராக நிறுத்த விரும்பினால், அது அவர்களின் முடிவு. அதை யாரும் எதிர்க்க முடியாது. விஜய் அண்ணனுடன் சினிமாவில் நடித்தவர்களெல்லாம், அவருடன் சேர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பலாம். திரைத்துறையைச் சேர்ந்த இன்னும் நிறைய பேர் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது.’’
``லண்டனில் அஜித் - விஜய் சந்திப்புக்கு எதிராக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?’’
``எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் வரிசையில் ‘தல - தளபதி’ என்று ஒரு சமன்பாடு திரையுலகில் இருந்தது. அதேசமயம், அவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தனர். இன்று விஜய் முதல்வராகியிருக்கிறார். அஜித் கார் ரேஸர் ஆகியிருக்கிறார். வெவ்வேறு துறைகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், அவர்கள் இருவரும் லண்டனில் சந்தித்து, கைகோத்து நின்றது மகிழ்ச்சியான தருணம். இது போன்ற நட்பும் ஒற்றுமையும் சினிமாத்துறையில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.’’
``தேர்தலுக்கு முன்பே விஜய்யை கைதுசெய்யச் சொன்னதாக திருமாவளவன் பேசியது கூட்டணியில் குண்டுவைக்கும் செயல்தானே?’’
``தேர்தல் காலகட்டங்களுக்கு முன்பும் பின்பும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. திருமாவளவன் தேர்தலுக்கு முன்பு நடந்ததை வெளிப்படுத்தி யிருக்கிறார். ஆனால் தற்போது எங்கள் கூட்டணியில் அவர் வலுவாக இணைந்துள்ளார்.’’
``தி.மு.க - பா.ஜ.க நெருங்குவதாக வரும் தகவல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
``பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை அளவில் தி.மு.க-வும் காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளன. எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அதை எதிரணியினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்வது இயல்புதான். இருப்பினும், தி.மு.க-வின் இறுதி நிலைப்பாட்டை அந்தக் கட்சியின் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்.’’
``முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வின் சர்ச்சைக்குரிய பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
``தளபதி விஜய் அண்ணன் வந்த பிறகு சிறுவர்களும் ஆர்வத்துடன் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். சிறுவர்கள் முகம் சுளிக்கும் வகையில், அவர்களை அரசியலில் தவறாக வழிநடத்தும் வகையில் சீனியர் தலைவர்கள் பேசக் கூடாது.’’
