Politics
மிசா வரலாறு தெரியாத விஜய்யின் உளறல்!

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்கிற அளவுக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும், எழுச்சியையும் உருவாக்கியது எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலைக் காலம். பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால், பிரதமர் தனது பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனைத் தவிர்ப்பதற்காக, 1975 ஜூன் 25 அன்று நள்ளிரவில், நாடு முழுவதும் எமர்ஜென்சி அமல் படுத்தப்பட்டது.
வடமாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கு விசாரணை கிடையாது, ஜாமீன் கிடையாது. மிசா சட்டத்தின் கீழ் நேரடியாக, சிறைக்கொட்டடிதான். இந்த நிலையைக் கண்டு மூத்த தலைவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சியில் உடல்நலிவுற்று 1975, அக்டோபர் 2ஆம் நாள் மரணமடைந்தார் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் தி.மு.க ஆட்சி நடைபெற்று வந்தது. எமர்ஜென்சியை எதிர்த்ததற்காக 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. இரவோடு இரவாக தி.மு.கவினர் பலரும் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, மேயர் சிட்டிபாபு, வைகோ, எஸ்.எஸ்.தென்னரசு, கோ.சி. மணி, திருச்சி சிவா எனப் பலரும் மிசா கைதி களாயினர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, ஸ்தாபன காங்கிரஸ் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஜனசங்கத் தினர் உள்ளிட்டோர் சிறைப்பட்டனர். அந்த எமர்ஜென்ஸி காலத்தில்தான், கலைஞரின் வீட்டுக்குச் சென்று, திருமணமாகி 5 மாதங்களே ஆன இளைஞர் மு.க.ஸ்டாலினை கைது செய்து, மிசா கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர்.
சிறைத்துறையினரின் மிருகத்தனமான தாக்குதலில் ஸ்டாலினுடன் சேர்ந்து அடிபட்ட பலரில் ஆசிரியர் கி.வீரமணி, ஆற்காடு வீராசாமி போன்றவர் கள் இன்னமும் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது விழுந்த அடிகளைக் குறுக்கே விழுந்து தாங்க முயன்ற சிட்டிபாபு கடுமையான தாக்குதலுக் குள்ளாகி மரணமடைந்தார். மதுரை சிறையில் சாத்தூர் பாலகிருஷ்ணன் என்ற தி.மு.க. பிரமுகரும் சிறைக் கொடுமைகளால் மரணமடைந்தார்.
ஓராண்டு காலம் சிறைக் கொடுமைகள் தொடர்ந்த நிலையில், உள்நாட்டிலும் வெளிநாடு களிலும் ஏற்பட்ட எதிர்ப்பலையின் காரணமாக 1977ஆம் ஆண்டு தொடக்கத்தில் எமர்ஜென்சியைத் திரும்பப் பெற்றார் இந்திரா அம்மையார். மிசா கைதிகள் விடுதலையாயினர்.
சுதந்திர இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி என்பது கருப்பு அத்தியாயம். அந்த இருண்ட காலத்தின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிற விஜய் சட்டமன்றத்திலேயே பேசியதும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறையில் பட்ட அடிகளால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பை இழிவுபடுத்தும் வகையில் சைகை செய்ததும், தமிழ்நாடு எவ்வளவு கேவலமான அரசியலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் எந்த வரலாறும் கிடையாது. கரூரில் 41 பேர் பலியான போது, தி.முக. அரசு வழக்குப் போடாமல் விட்ட மாபெரும் தவறைச் செய்த நிலையிலும், மக்கள் முன்பாக விஜய்யோ அவரது கட்சியினரோ வரவில்லை. பயந்தாங்கொள்ளிகளாக வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தார்கள். போராடும் துணிச்சல் கொஞ் சமும் இல்லாத கூட்டம், ரீல்ஸ் கவர்ச்சியாலேயே காலம் கடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளது.
அதன் உச்சகட்ட நிகழ்வுதான் சட்டமன்றத்தில் மிசா காலம் பற்றிய விஜய்யின் உளறல். சென்னை மத்திய சிறையில் நடந்த மிசா கொடுமைகள் பற்றி விசாரித்த நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் கமிஷன் அறிக்கை, சட்டமன்ற லைப்ரரியிலேயே இருக்கிறது. விஜய்க்குப் படிக்கத் தெரிந்தால் அதை எடுத்துப் படித்து மிசா காலத்து வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரத் திமிர்தான் எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்த இந்திரா அம்மையாரையே வீழ்த்தியது. அந்தப் பாடத்தையும் விஜய்க்கு வரலாறு விரைவில் கற்பிக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)