சேதமான குழாயை மாற்றியமைக்க போராடும் ஊழியர்கள்; வடசென்னையில் குடிநீர் வினியோகம் சீராவதில் தாமதம்

புழல்: குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஏற்பட்ட பகுதியை அகற்றிவிட்டு, புதிய குழாயை இணைக்க, வாரிய ஊழியர்கள் போராடி வருகின்றனர். பணிகள் முடிய இரண்டு நாட்களாகும் என்பதால், வடசென்னையில் குடிநீர் வினியோகம் சீரடைவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து தினமும், 30 கோடி லிட்டர் குடிநீர் செல்லும், 1,200 மி.மீ., விட்டம் கொண்ட பிரதான குழாயில், நேற்று முன்தினம் அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், புழல் ஜி.என்.டி., சாலையில், 15 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது.
குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டு, பள்ளம் ஏற்பட்ட பகுதியில், சாலை தடுப்புகளும் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து, வாரியத்தினர் நேற்று முன்தினம் காலை முதல், உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், திரு.வி.க.நகர், பட்டேல் நகர், பெரம்பூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் குழாய் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பள்ளம் ஏற்பட்ட பகுதியில் 100 மீட்டர் துாரத்துக்கு தடுப்புகள் அமைத்து, சேதமடைந்த குழாயின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டுள்ளது. புதிய குழாய் இன்று பொருத்தப்பட உள்ளது. இப்பணி முடிய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என, குடிநீர் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
ராட்சத பள்ளத்தால் புழல் ஜி.என்.டி., சாலையில் போக்குவரத்து மெதுவாக செல்கிறது. நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் சாலையை கடக்கவும் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
புழல் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடப்பதால், தண்டையார்பேட்டை மாதா கோவில் பகுதியில் மூன்று நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம் 1:00 மணி வரை காத்திருந்தும், குடிநீர் லாரி வராததால், ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சேனியம்மன் கோவில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் லாரி அனுப்புவதாக கூறியும், வராததால், தண்ணீர் இல்லாததால் பெண்கள், வேலைக்கு செல்வோர், மாணவ - மாணவியர், பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை முடித்து, குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால், குழாய்களை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என, வடசென்னை மக்கள் வலியுறுத்தி வரகின்றனர்.
நாளை சீராகும் ''குழாய் சேதத்தால் பாதிக்கப்பட்ட வார்டுகளில், லாரிகள் வாயிலாக தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேதமடைந்த 24 அடி நீள குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இன்று இரவுக்குள் பணிகள் முடிந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பகிர்மான நிலையங்களுக்கு குடிநீர் அனுப்பப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை காலை முதல் குழாய் குடிநீர் வினியோகம் சீராகும். - ஆனந்த், இயக்குனர், சென்னை குடிநீர் வாரியம்.