குழாய் உடைப்பால் வடசென்னைக்கு 3 நாட்கள் குடிநீர் நிறுத்தம்! ஜி.என்.டி., சாலையில் ஏற்பட்டது ராட்சத பள்ளம்; சீரமைக்க முடியாமல் திண்டாடும் வாரியம்

சென்னை: புழல் ஏரியில் இருந்து தினமும், 30 கோடி லிட்டர் குடிநீர் செல்லும் பிரதான குழாயில், நேற்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு, சாலையில் பிரமாண்ட பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஜி.என்.டி., சாலையில் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. குழாய் உடைப்பை சரி செய்ய முடியாமல் திணறும் குடிநீர் வாரியம், வடசென்னையின் பல பகுதிகளுக்கு, மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. இதில், புழல் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும், 30 கோடி லிட்டர் குடிநீர், திரு.வி.க., நகர், மணலி உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளுக்கு, குழாய் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஜி.என்.டி., சாலைக்கு அடியில், 1,200 எம்.எம்., விட்டம் உடைய குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய் பதித்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
சாலையில் தொடர்ந்து செல்லும் வாகனங்களின் அழுத்தம், குழாயில் ஏற்பட்டுள்ள அரிப்பு ஆகியவற்றால், அவ்வப்போது குழாயில் விரிசல் ஏற்பட்டு, சாலை உள்வாங்குகிறது.
புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, நே ற்று அதிகாலை 2:00 மணிக்கு, ஜி.என்.டி., சாலை, திடீரென உள்வாங்கியது. சாலை அடியில் புதைக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 15 அடி அகலம், 25 அடி ஆழத்தில், பிரமாண்ட பள்ளம் விழுந்தது. உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் பீறிட்டது.
லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணானது. இதனால், அணுகு சாலையிலும் பள்ளம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால், பெரியளவில் வாகன போக்கு வரத்து இல்லாததால், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
எனினும், சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுவதை தடுக்க, பள்ளம் விழுந்த இடத்தைச் சுற்றி, பிளாஸ்டிக் மற்றும் இரும்பு தடுப்புகளை அமைத்தனர்.
வாகன போக்குவரத்தையும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளித்து, அப்பகுதியில் செல்லும் குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர்.
இப்படி பாதிப்புகள் ஏற்பட்டாலும், குடிநீர் வாரிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வருவது போல் காலை 10:00 மணிக்குத்தான், சம்பவ இடத்திற்கு வந்தனர். முதலில், அணுகு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்தனர். தொடர்ந்து, ஜி.என்.டி., சாலையில் ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண் டுகளில், இரட்டை ஏரி சந்திப்புகளில் மட்டும், நான்கு முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த மே மாதம், புழலில் இருந்து வடசென்னைக்கு செல்லும் குடிநீர் குழாயில் இருந்து நீர் கசிந்து, சாலை உள்வாங்கி மெகா பள்ளம் உருவானது.
இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பிரதான குழாயில் உடைப்பால், சென்னையின் நான்கு மண்டலங்களில், குடிநீர் வினியோகம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புழலில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு ஜி.என்.டி., சாலையில் வரும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாயை மாற்றி, புதிதாக பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதனால், பட்டேல் நகர், வியாசர்பாடி குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக, மணலி மண்டலத்தில், 17வது வார்டு; மா தவரம் மண்டலத்தில், 25 முதல் 31வது வார்டு வரை; திரு.வி.க., மண்டலத்தில் 71, 72வது வார்டுகள் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலம் முழுதும், நாளை வரை குடிநீர் வினியோகம் நிறுத் தப்படுகிறது.
மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, ஏற்கனவே இயங்கி வரும் லாரிகள் மட்டுமல்லாமல், கூடுதல் லாரிகளில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 044 -28451300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.