Politics
18 ஆண்டுகள் அரசு பணிபுரிந்தால் ரூ.10 ஆயிரம் தான் ஓய்வூதியமா பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
திண்டுக்கல்: ''ரூ.10 ஆயிரம் என சொற்ப தொகையை ஓய்வூதியமாக அறிவித்திருக்கும் த.வெ.க., அரசின் செயல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதாகும்'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலே ஒரு அரசு ஊழியர் ஒய்வூதியம்பெற தகுதியானவர் என்கிற நிலை இருந்தது. கடந்த ஜனவரியில் தி.மு.க., அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமான 'டேப்ஸ்' திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டது. அத்திட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் 50 சதவீத ஓய்வூதியம் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
தற்போது த.வெ.க., அரசு வெளியிட்ட அத்திட்டத்திற்கான கூடுதல் அரசாணையில் தகுதியான பணிக்காலம் 18 ஆண்டுகள் என அறிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், '18 ஆண்டுகள் பணிக்காலம் இன்றி அதற்கு குறைவாக அரசு பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பை கட்டாயம் எனக்கூறி பிடித்தம் செய்து, லட்சக்கணக்கில் ஊதியத்தையும் கையில் வைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் சொற்ப தொகையினை ஓய்வூதியமாக அறிவித்திருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைக்கும் வஞ்சக செயலாகும்.
இந்த அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லை என்றால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகும். இது அரசுக்கான எச்சரிக்கை மணியாகும்' என்றார்.