Politics
எல் நினோ, வெயிலின் தாக்கம் பற்றி அலசுமா மாவட்ட பசுமைக் குழு புத்துயிர் பெறுமா
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முடங்கி கிடக்கும் பசுமை குழுவை, ஆட்சி மாறி, புதிய கலெக்டர் பொறுப்பேற்க உள்ளதால் புதிய உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை நியமித்து, தற்போது நிலவி வரும் எல்நினோ, கடும் வெயில் குறித்து ஆலோசனைகளை நடத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முந்தைய தி.மு.க., அரசு கலெக்டரை தலைவராக கொண்டு பசுமை குழுவை உருவாக்கியது. டி.ஆர்.ஓ., வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வனத்துறை அலுவலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், தன்னார்வ அமைப்பினர் ஆகியோரை கொண்டு செயல்படும்.
தற்போது ஆட்சி மாறிவிட்டது. கலெக்டரும் புதிதாக பொறுப்பேற்க உள்ள நிலையில், மாவட்ட பசுமைக் குழுவை புத்துயிர் பெற செய்வது அவசியமாகிறது. புதிய பிரச்னையாக காலநிலை மாற்றமும் தலையெடுத்துள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை அமைச்சகத்தின் அலகுகள் மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவை முழுவதுமாக அலுவலக பயன்பாட்டிற்கு வரவில்லை.
எல் நினோ செப். முதல் துவங்கும் என அறிவித்த படி, இம்மாத துவக்கத்தில் இருந்தே மாவட்டத்தில் கடும் வெயிலின் தாக்கம் உள்ளது. மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளான நரிக்குடி, திருச்சுழியில் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மாமரங்கள் பூக்கும் காலகட்டத்தில் பூக்கள் கருகி அந்தாண்டு முழுவதும் விளைச்சல் இல்லாமல் போவது தொடர்கிறது. குடிநீர் தேடி வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு இறங்குகின்றன.
எல்நினோவின் கடும் வெயில் தாக்கத்தை அலசி ஆலோசிக்க வேண்டியது பசுமைக் குழுவின் கடமை. தி.மு.க., ஆட்சியில் பெயரளவில் செயல்பட்டவை இந்த ஆட்சியிலாவது நல்ல முறையில் செயல்பட வேண்டும். கூட்டம் நடத்தி துடிப்பான தன்னார்வ அமைப்புகளை பங்கேற்க செய்ய வேண்டும். காலநிலை மாற்ற பாதிப்புகளை ஆராய தெளிவான திட்டங்களை உருவாக்க வேண்டும்.