சிலையாக அல்ல சிந்தனையாகத் தேவைப்படுகிறார் பெரியார்! - கவிஞர் கோ.லீலா நேர்காணல்

பொறியாளர், சூழலியல் ஆர்வலர், கவிஞர், கட்டுரையாளர், உரையாளர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகங்களோடு தொடர்ந்து இயங்கிவருபவர் கோ. லீலா. தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களுக்கென்றே போடப்பட்ட தடைகளையெல்லாம் "பெரியார்' எனும் பகுத்தறிவு தடிகொண்டு தகர்த்தெறிந்துவிட்டு, தன்னளவில் சுயசிந்தனையுடைய ஒரு மனுஷியாய் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்.
நீர் வளத்துறை பொறியாளரான இவர் பேசத்தொடங்கினால், சிந்தனைகள் காட்டாற்று வெள்ளம்போல் மடைந்திறந்து பாய்கின்றன. "இனிய உதயம்' வாசகர்களுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து சில துளிகள் இங்கே; சந்திப்பு: புதுகை முருகுபாரதி
திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் பிறந்த திருக்குவளையைச் சேர்ந்தவர் உங்கள் தந்தையார். நீங்கள் திருவாரூரில் பிறந்து கல்வி பயின்றவர். உங்கள் ஊர் நினைவுகள் குறித்து...?
ஊர் நினைவு என்றாலே மனதிற்குள் மழைச்சாரல் பொழியும் குதூகலம் வந்துவிடும். அதிலும் தொன்மைமிகு திருவாரூர் என் றால் பெருமையும் ஆனந்தமும் கூடிவிடும். திருவாரூர் எனக்கு ஓர் ஊர் மட்டுமல்ல; அது ஒரு சிந்த னைப் பள்ளிக்கூடம். கீழைநாடும் மேலைநாடும் சந்திக்கும் லெபனான் போலவும், ஆன்மீகமும் நாத்திகமும் உரையாடும் நிலமாகவும் அது இருந்தது. கோயிலில் அமர்ந்து பகுத்தறிவு உரையைக் கேட்கவும், அதே நேரத்தில் கோயில் சிற்பங்களை ரசிக்கவும் வாய்ப்பளித்த ஊரது.
தேனார்ந்த தமிழோடும் திகழ்கின்ற தேனகரம்.
காலைத் தென்றல் இசையோடு காவியங்கள் கூறும்.
தியாகேசர் திருக்கோயில் தீபங்கள் சுடரும்...
காண்போர்தம் மனமெங்கும் தேனமுதம் ஊறும்...
தியாகேசர் திருநடனம் திங்களொளி வீசும்...
கோடி கோடி பேசும்...
திருவாரூர் என்ற பெயரில் தமிழின் உயிரும் உண்டு!
திருவாரூர் பெயர் சொன்னால் தமிழ்நெஞ்சம் துள்ளுமே,
திருவாரூர் புகழ் பாடத் திருவாயும் மலருமே!'
என்றெல்லாம் என் நினைவுகள் கவிதையாய்ப் பொங்கும்.
உங்கள் குடும்பம் பொதுவுடைமை இயக்கப் பின்னணியைக் கொண்டது. பெற்றோரின் வாசிப்பும் சிந்தனையும் உங்கள் வளர்ச்சியில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தின?
என் அப்பா, அம்மா இருவருமே தீவிர வாசிப்பாளர்கள். என் தம்பி இயற்கை உடனுறை வழக்கறிஞர் கோ. அண்ணாதுரையும் வாசிப்பாளர்.
என் பெரியப்பாக்கள் கம்யூனிசச் சிந்தனையில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர்கள். ட.ந. தனுஷ்கொடி பாங்கலில் பலமுறை சேர்மேனாகவும், 1967-ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மிகுந்த நேர்மையானவர். என் அப்பா பெரியாரியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம் மாவின் தாய்மாமன்களும் பொதுவுடைமைச் சிந்தனையோடு இருந்தவர்கள். எனவே, "இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வீட்டிலிருந்தே இயல்பாக வந்தது.
என் தாத்தா முத்து, முற்போக்குச் சிந்தனையுடையவர். அவர் இறந்தபோது, அவருடைய மூத்த மகளான என் அம்மாதான் இடுகாடு சென்று கொள்ளிவைத்தார். அந்தச் செயலும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. இன்று இயற்கை வளங்கள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை என்ற எண்ணத்தோடு சூழலியலை எழுதுகிறேன். ஆனால் சாதி, பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இயற்கை வளங்களின் பகிர்விலும் ஏற்றத்தாழ்வு உள்ளது. அதை உரத்துச் சொல்லவேண்டும். அந்தச் சிந்தனைக்கான விதைகள் குடும்பத்திலேயே விதைக்கப்பட்டவை.
இன்று என் மகள் லியாவும், தம்பி மகன் அர விந்த பிரபுவும் தன்னியல்பில் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக வளர்கிறார்கள்.
பள்ளிக்கால நாட்களில் மறக்கமுடியாத அனுபவங்கள்?
பள்ளிக்காலம்தான் என் இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்தது. யாரிடமும் அதிகம் பேசாத அமைதியான பெண்ணாக இருந்தேன். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எஸ்.எஸ். நடுநிலைப் பள்ளியிலும், பின் னர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். என்னைப் போன்ற அமைதியான மாணவியை மேடைப் பேச்சாளராக உருவாக்கியவர் தமிழாசிரியர் இ.சரோஜா அம்மா. என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தைத் தந்தவர் அவர்.
ஒருமுறை திருக்குறள் முனுசாமி அய்யா பள்ளியில் உரையாற்றும்போது, "நிலாவில் முதல் காலடியை வைத்தவர் யார்?' என்று கேட்டார். எல்லோரும் பதில் சொன்னோம். "இரண்டாவது காலடியை வைத்தவர் யார்?' என்று கேட்டபோது, 1,500 மாணவிகளுக்கு நடுவில் என் ஒற்றைக் குரல், "அவரேதான்!' என்று ஒலித்தது. அதை நுண்ணறிவு என்று பாராட்டி, உடனே பரிசளித்தார்கள். 2026 மார்ச்சில் திருக்குறள் அமைப்பு வழங்கிய "நுண்ணறிவுச் சுடர் விருது' அந்த நினைவை மீண்டும் நினைவூட்டியது.
நாடகத்தில் சோழன் செங்கணானாக நடித்து முதல் பரிசு பெற்றேன். ஆனால் இரும்பொறையாக நடித்திருக்கலாமோ என்ற சிறு உறுத்தல் இன்னும் உண்டு! இரா.சண்முக வடிவேல் அய்யாவிடம் இரண்டு ஆண்டுகள் சிறப்பு வகுப்பில் தமிழ் பயின்றதும் மறக்கமுடியாத அனுபவம். கணிதம், அறிவியல் பிடித்த பாடங்கள்; வரலாறு மட்டும் பிடிக்காது. எந்தப் பேரரசைப் பற்றி கேட்டாலும் ஒரே ஒரு பேரரசைப் படித்துவிட்டு அதையே எழுதிவிடுவேன்!
பெண்கள் பெரிதும் தேர்வுசெய்யாத சிவில் பொறியியலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
எல்லோரையும் போல நானும் மருத்துவராகவே விரும்பினேன். என் அப்பாவுக்கு அவ்வப்போது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும். அவருக் கும் கிராமத்து மக்களுக்கும் மருத்துவம் பார்க்கவேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் 0.50 மதிப்பெண்ணால் அந்த ஆசை நிறைவேறவில்லை. எங்கள் குடும்ப மருத்துவர் சண்முகம், "மருத்துவம் மட்டுமல்ல; பொறியியல் படித்தும் சமூகத்திற்கு நல்லது செய்யலாம்' என்றார்.
கணினிப் பொறியியல் படிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் சமூகப் பொறியியலான சிவில் பொறியியல் மூலம் மக்களோடு நேரடியாகப் பணியாற்றலாம் என்று உணர்ந்தேன். அதனால் பி.இ. சிவில் தேர்வுசெய்தேன். இன்று நீர்வளத் துறையில் விவசாயிகள் நலனுக்காகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
புத்தக வாசிப்பில் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?
அப்பா, அம்மா, தம்பி என அனைவருமே தீவிர வாசிப்பாளர்கள். திருவாரூரில் வாசிப்பு ஒரு வாழ்வியலாகவே இருந்தது. சைக்கிளில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வரும் சர்க்குலேஷன் முறையில் புத்தகங்களைப் பெற்று வாசிப்போம். உறுப்பினர்களுக்குள் புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வோம். பெற்றோரின் திருமணப் பரிசாக வந்த கல்லோ காவியமோ, பெண்ணின் பெருமை, திருக்குறள் போன்ற நூல்களையும், அப்பா வாங்கி வைத்திருந்த ஐண்ம்ஹப்ஹஹ்ஹய் இப்ன்ய்க்ங்ழ், ஐர்ஜ் ற்ர் ஆக்க்ழ்ங்ள்ள் ஹ டன்க்ஷப்ண்ஸ்ரீ ஙங்ங்ற்ண்ய்ஞ், கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களையும் வாசித்தேன். மாதந்தோறும் கோகுலம், பூந்தளிர் வாங்கிவருவார்கள். எப்போதும் தம்பிதான் முதலில் வாசிப்பார்!
திருவாரூர் தெற்கு வீதியில் இருந்த நூலகத்திற்கு முதலில் என்னை அழைத்துச் சென்றதும் தம்பிதான். அம்புலிமாமா, பாப்பா மஞ்சரி, சித்ரகதா என்று தொடங்கிய வாசிப்பு, பின்னர் ஓஷோ, கலீல் ஜிப்ரான், ரூமி, செக்காவ், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, கலைஞர், சுந்தர ராமசாமி, தகழி சிவசங்கரன் பிள்ளை, அகிலன், தி. ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ஜோ.டி. குரூஸ் என விரிந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்களையும் விரும்பி வாசிப்பேன். என்னைபொறுத்தவரை வாசிப்பே என் சுவாசம். இயற்கையை வாசித்தல், மனிதர்களைப் படித்தல், புத்தகங்களைப் படித்தல் இவை மூன்றுமே என் வாசிப்புக்கு உட்பட்டவை. உலகமே ஒரு பெரிய புத்தகம். அதன் கிளைக்கதைகள்தான் மனிதர்கள்.
முதன்முதலில் எழுதிய படைப்பு எது?
பள்ளி, கல்லூரிக் காலங்களில் நான் பேச்சாளராகத்தான் அறியப்பட்டேன். ஆனால் ஏழாம் வகுப்பில் ஒரு கவிதை எழுதினேன். அது நினைவில் இல்லை; வெளியிலும் வரவில்லை.
"யாருக்காகவும் இன்றி மலர்தல் தன்னியல்பு; மலர்ந்து உதிர்தலும் பேரழகு' என்ற உணர்வைத் தந்தது. அதன்பின் ஏழாம் வகுப்பில், "நாடு உனக்கு என்ன செய்தது? நீ நாட்டிற்கு என்ன செய்தாய்?' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். எழுதுதல் அப்போதே உள்ளுக்குள் விதையாக இருந்திருக்கவேண்டும்.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மீது ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
சிறுவயது முதலே மெய்யியல் சார்ந்த கவிதைகள் என்னை ஈர்த்தன. தம்பியின் மூலம் ஓஷோவை வாசித்தபோது ஸென், தாவோயிசம், சூஃபியிசம் போன்ற சிந்தனைகளுக்குள் சென்றேன். கலீல் ஜிப்ரான், மிக்கேல் நைமி, ரூமி ஆகியோரின் மெய்யியல் வாசிப்பும், வீட்டிலும் ஊரிலும் இயல்பாக இருந்த தமிழ் இலக்கியமும் ஒன்றிணைந்தபோது, அந்த இரு உலகங்களையும் இணைக்கும் வடிவமாக ஹைக்கூ என்னைக் கவர்ந்தது. பின்னர் பிருந்தா சாரதியின் "மீன்கள் உறங்கும் குளம்' நூலை வாசித்தபோது ஹைக்கூ மீதான ஆர்வம் மீண்டும் உயிர்பெற்றது. என் பொறியியல் பணியின் காரணமாக காடு, மலை, ஆறு எனப் பயணித்த காட்சிகளும் அந்த ஆர்வத்திற்கு உரமாகின.
தங்களின் ஹைக்கூ கவிதை நூல்களுக்கு "ஷின்டோ', "சுகிமி' போன்ற ஜப்பானியச் சொற்களைத் தலைப்புகளாகப் பயன்படுத்த என்ன காரணம்?
பாரதி சொன்னதுபோல், "சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற எண்ணமே. பிறமொழி இலக்கியங்களில் உள்ள சில சொற்களையும் கருத்துகளையும் தமிழுக்கு இடையூறில்லாத வகையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். "மணிச்சிரல்' என்ற என் ஹைக்கூத் தொகுப்பின் தலைப்பே சங்கத் தமிழில் மீன்கொத்தியைக் குறிக்கும் சொல்.
"ஹைக்கூ தூண்டிலில் ஜென்' எழுதும்போது இணைய வழியாக ஜப்பானிய மொழியைத் தேவையான அளவுக்கு சுமார் இருபது நாட்கள் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் இருக்கும் பண்பாடு, நம்பிக்கை, கதை ஆகியவை என்னை ஈர்த்தன. அவற்றை அப்படியே தமிழாக்கம் செய்தால் அந்தச் சொல்லின் சுவை மாறிவிடுமோ என்ற எண்ணமும் இருந்தது. வாசகர்களுக்கும் அந்தத் தேடலின் சுவை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அவற்றைப் பயன்படுத்துகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளில் (2000- 2020) வெளியான சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக நீங்கள் எழுதிய "மறைநீர்' பாராட்டப்பட்டுள்ளது. அதுகுறித்து சொல்லுங்களேன்.''
"மறைநீர்' நூல் 2019 செப்டம்பரில் படைப்பு பதிப்பகம் வெளியிட்ட என் முதல் நூல். நீர்வளத் துறைப் பொறியாளராகவும், சூழலியல் ஆர்வலராகவும், கழிமுகப் பகுதி விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்தும் வந்ததால் தண்ணீரின் அருமையை நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன். "டஹஹ் க்ஷஹஸ்ரீந் ற்ர் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்' என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து எழுதவும் களப்பணியாற்றவும் செய்கிறேன். மறைநீர் தண்ணீர் மேலாண்மை, மறைநீர், கடலுக்குத் தண்ணீர் சேர்வது, பழந்தமிழர் பாசன மேலாண்மை, மழைக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழலியல் கருத்துகளை எளிய மொழியில் முன்வைக்கிறது. தண்ணீர் நெருக்கடி இனி எதிர்காலப் பிரச்சினை அல்ல. காலநிலை மாற்றத்தால் ஒரு பக்கம் அதீத வறட்சியும், மறுபக்கம் அதீத வெள்ளமும் உருவாகின்றன. அதன் விளைவாக தண்ணீர், உணவு, மின்சாரம் ஆகியவற்றிலும் நெருக்கடிகள் உருவாகின்றன. இந்த நூல் பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, அதன் கட்டுரைகள் கல்லூரிப் பாடத்திட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன.
நீங்கள் எழுதிய "சோறு - உணவு அரசியல்' நூலில், அப்படி என்னதான் அரசியல் இருக்கிறது?
சோற்றில் இல்லாத அரசியல் என்ன என்று கேட்கவேண்டிய சூழல்தான் இன்று உள்ளது! நெல் அரசியல், சொல் அரசியல், சாதி மற்றும் உணவு, பாலின அடிப்படையிலான உணவு ஏற்றத்தாழ்வு, சைவ- அசைவ அரசியல், பெருவணிக நிறுவனங்களின் ஆதிக்கம், மரபணு மாற்றம், இரசாயன உரங்கள், மலட்டு விதைகள் என உணவின் பின்னால் ஏராளமான அரசியல்கள் உள்ளன. "சோறு' என்ற சொல் கீழ்மையானதாகவும், "சாதம்' என்ற சொல்லே உயர்வானதாகவும் கருதப்படுவதில்கூட சமூக அரசியலைப் பார்க்கமுடியும். அதேநேரத்தில் சங்ககால உணவு முறை, உண்ணும் முறை, பாரம்பரிய நெல் வகைகள் போன்றவற்றின் வழியாகத் தமிழர்களின் உணவு அறிவியலையும் இந்நூல் பேசுகிறது.
உணவு என்பது வெறும் வயிற்றை நிரப்புவது அல்ல; அது பண்பாடு, பொருளாதாரம், அர சியல், சுற்றுச்சூழல், உடல்நலம் அனைத்தையும் இணைக்கும் தளம்.
தமிழ் இலக்கியம் எதை நோக்கி நகர வேண்டும்?
உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை, சமூகத்தின் கீழ்மைகளைச் சாடி, எழுச்சிக்கான சிந்தனைகளை உருவாக்கியவையே சிறந்த படைப்புகளாக இருந்துள்ளன. விடுதலைப் போராட்டம், சாதி எதிர்ப்பு, பெண் கல்வி, பகுத்தறிவு, தொழிலாளர் எழுச்சி என இலக்கியம் பல காலங்களில் மக்களுக்கானதாக இருந்திருக்கிறது.
இன்று காலநிலை மாற்றமும் இயற்கைப் பேரிடர்களும் நம்மை அச்சுறுத்துகின்றன. எனவே சூழலியல் சிந்தனைகளைக் கலை, இலக்கியத்தின் வழியே மக்களிடம் கொண்டுசேர்ப்பது படைப்பாளிகளின் பொறுப்பு. தமிழ் ஒரு சூழலியல் மொழி. தமிழ்ச் சமூகம் ஒரு சூழலியல் சமூகமாக இருந்திருக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் மலர், மரம், செடி, கொடி, காடு, கடல், மலை, பறவை, விலங்கு என இயற்கை வாழ்வியலின் அங்கமாகவே உள்ளது. எனவே இன்றைய தமிழ்ப் படைப்பாளிகள் சூழலியல் பாதுகாப்புக்கான சிந்தனைகளைப் படைப்பாக்கத்தின் வழியே முன்னெடுக்க வேண்டிய மிகப் பெரிய தேவையும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீர்வளம் இன்றைக்குப் போதுமானதாக இருக்கிறதா?
ஒரு நீர்வளத் துறைப் பொறியாளராக "ஆம்' அல்லது "இல்லை' என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லமுடியாது. தமிழகத்தில் ஏராளமான அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகள் உள்ளன. திறமையான நீர்வளப் பொறியாளர்களும் உள்ளனர். தமிழகம் முற்றிலும் மழையற்ற மாநிலமும் அல்ல. ஆனால் மூன்று முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, காலநிலை மாற்றம். மழையின் அளவு, இடம், காலம் மாறுகிறது. குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வதால் முழு மழையையும் சேமிக்கமுடியாத சூழல் ஏற்படுகிறது.
இரண்டாவது, நிலத்தடி நீரின் மீதான அழு த்தம். விவசாயம், நகர்ப்புறம், தொழிற்சாலைகள் என தேவைகள் அதிகரிக்கின்றன. நிலத்திற்குள் மழைநீர் செல்வதற்கான இயற்கை வாய்ப்புகளும் குறைகின்றன.
மூன்றாவது, இடம் மற்றும் காலம் சார்ந்த நீர் சமநிலையின்மை. ஒரு பகுதியில் வெள்ளம்; மற்றொரு பகுதியில் வறட்சி என்பது முரண்பாடாகத் தோன்றினாலும் அதுவே நிதர்சனம். இதற்குப் புதிய அணைகள் மட்டுமே தீர்வு அல்ல. ஏற்கெனவே உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கால்வாய்களைப் பாதுகாக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்த் திறன்மிக்க பாசனம், கழிவுநீர் மறுபயன்பாடு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் காடுகளைப் பாதுகாத்தல், நீர்வளத்திற்கு ஏற்ப பயிர்த் தேர்வு ஆகியவை அவசியம். என் பார்வையில், தமிழகத்தில் தண்ணீர் இல்லை என்பதல்ல பிரச்சினை; கிடைக்கும் தண்ணீரைத் தேவையான காலத்திற்குத் தேவையான இடத்தில் சேமித்து, பகிர்ந்து, மீண்டும் பயன்படுத்தும் திறன்தான் மிகப்பெரிய சவால். காடு, மண், மழை, ஆறு, ஏரி, நிலத்தடி நீர், விவசாயம், உணவு, நகரம், தொழில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை.
எனவே நமது இலக்கு, "நீர்ப்பற்றாக்குறை மாநிலம்' என்ற பார்வையிலிருந்து "நீர்ப் பாதுகாப்பான தமிழகம்' என்ற இலக்கை நோக்கிச் செல்வதாக இருக்கவேண்டும்.
சமகாலப் பெண் படைப்பாளிகளில் நம்பிக் கையளிப்பவர்கள் யார்?
நான் ஆண்- பெண் என்ற அடிப்படையில் வாசிப்பைத் தேர்வுசெய்வதில்லை. மெய்யியல், சூழலியல், பொறியியல், பெரியார், அம்பேத்கர், சமூக அக் கறையுள்ள நூல்கள் என என்னைச் சிந்திக்கவும் தொந்தரவு செய்யவும் வைக்கும் படைப்புகளை விரும்பி வாசிப்பேன். சூழலியல், பெண்ணியம், சிறார் இலக்கியம், உளவியல், மொழியாக்கம், அறிவியல், வரலாறு போன்ற தளங்களில் எழுதும் பல பெண்கள் நம்பிக்கையளிக்கிறார்கள். நிவேதிதா லூயிஸ், நளினி தேவி, அன்புவல்லி தங்கவேலன், கயல்.எஸ்., ஜே.ஜே. அனிட்டா, மதுரா, காயத்ரி ராஜசேகர், அகிலா புகழ், ஜே.மஞ்சுளாதேவி, நான்சி கோமகன், ஈரோடு சர்மிளா, மருத்துவர் கலையரசி திருநாவுக்கரசு, ஷர்ஜிலா பர்வீன் யாகூப், ஜெயஸ்ரீ, நாகலெட்சுமி ராஜகோபாலன், நாராயணி சுப்ரமணி, வெ.கிருபாநந்தினி என பலரும் தங்கள் தளங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர். பெண் படைப்பாளிகள் இன்னும் வரலாறு, சூழலியல், விமர்சனம் போன்ற தளங்களில் அதிகமாக எழுதவேண்டும். வெளிச்சத்திற்கு வராத பல திறமைகள் உள்ளன.
பெண்கள் சமுதாயத்திலும் அரசியலிலும் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டார்களா?
முழுமையாக விடுதலையை எய்தவில்லை என்றே சொல்வேன். என் பார்வையில் சிந்தனை மாற்றமே பெரும் விடுதலை. பெண் விடுதலை என்பது உடை அணியும் சுதந்திரம் அல்லது வெளியே செல்லும் சுதந்திரம் மட்டுமல்ல. தண்ணீர், உணவு, கல்வி, உடல்நலம், சொத்துரிமை, பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம், சம ஊதியம், வீட்டுப்பணிப் பகிர்வு, உடல் மற்றும் மன வன்முறையிலிருந்து பாதுகாப்பு என அது பல அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெண் உயர்ந்த பதவியில் இருந்தாலும் குடும்பத்திற்கான தண்ணீரைச் சேகரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் அவள்மீதே இருக்கிறது. அவள் இழக்கும் நேரம், கல்வி, உடல்நலம் குறித்தும் நாம் பேச வேண்டும். பெண் தன் உடல் குறித்த முடிவைத் தானே எடுக்கவேண்டும். அதேபோல் தன் சொத்தை எவ்வாறு நிர்வகிப்பது, விற்கவேண்டுமா, முதலீடு செய்யவேண்டுமா என்பதையும் தானே தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும். அரசியலில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பல இடங்களில் அவர்களுக்குப் பதிலாக ஆண் உறவினர்கள் அதிகாரம் செலுத்தும் நிலை உள்ளது. இது மாறவேண்டும்.
பெண்களுக்கு மனநல ஆலோசனை, சட்ட அறிவு, உடல்நல அறிவு, சொத்துரிமை, அரசியல் பயிற்சி போன்றவை வழங்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலின சமத்துவம் குறித்த கல்வி சிறுவயதிலிருந்தே வழங்கப்பட வேண்டும். உடை குறைத்து, சிகை குறைத்து, குழுப் புகைப்படம் எடுத்து, சாலையோரத் தேநீர் கடையில் தேநீர் அருந்துவது மட்டும் பெண் விடுதலையன்று. தண்ணீர், உணவு, உடல், கல்வி, பொருளாதாரம், சொத்து, அரசியல், அறிவு, முடிவெடுக்கும் அதிகாரம் என வாழ்வின் அனைத்து தளங்களிலும் பெண் தன்னாட்சி பெறுவதுதான் உண்மையான விடுதலை. பெரியார், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் போன்றோரின் உரத்த குரலால் சங்ககாலத்திற்குப் பின் ஒடுக்கப்பட்ட பெண்கள் இன்று இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது.
பெரியார் எனும் பேராளுமையின் தேவை தமிழ்ச் சமுதாயத்திற்கு இன்னமும் இருக்கிறதா?
ஆம். பெரியார் இன்னமும் தேவை. ஆனால் பெரியார் ஒரு சிலையாக அல்ல; சிந்தனையாகத் தேவை. அவர் எதிர்த்த சாதி ஆதிக்கம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, பிறப்பின் அடிப்படையிலான உயர்வு-தாழ்வு ஆகியவை முழுமையாக மறைந்துவிட்டனவா? இல்லை. சாதி இன்னும் திருமணம், அரசியல், சமூக உறவுகளில் செயல்படுகிறது. பெண்ணின் வாழ்க்கை குறித்த முடிவுகளில் குடும்பமும் சமூகமும் தலையிடுகின்றன. போலிச் செய்திகள், மூடநம்பிக்கைகள், அறிவியலுக்கு எதிரான கருத்துகள் டிஜிட்டல் காலத்திலும் வேகமாகப் பரவுகின்றன. எனவே பெரியார் வலியுறுத்திய கேள்வி கேட்கும் பகுத்தறிவு இன்னும் அவ சியம். அவரை வழிபடுவதும் தேவையில்லை; முழுமையாக நிராகரிப்பதும் தேவையில்லை. அவர் கற்றுக்கொடுத்த சுயசிந்தனையைக் கொண்டு பெரியாரையே விமர்சனமாக வாசிப்பதுதான் அவ ருடைய சிந்தனைக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.
இன்றைய பெரியார் என்பது ஒரு தனிமனிதர் அல்ல. சாதியைப் பார்த்துக் கேள்வி கேட்கும் மனம், பெண்ணைச் சொத்தாகக் கருதும் மனநிலையை எதிர்க்கும் துணிவு, மூடநம்பிக்கையை அறிவியலால் சோதிக்கும் அறிவு, அதிகாரத்திடம் அஞ்சாமல் கேள்வி கேட்கும் உரிமை உணர்வு, ஒடுக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்கும் மனிதநேயம்' இவையெல்லாம் பெரியாரின் இன்றைய வடிவங்களாக இருக்கலாம். எனவே, "பெரியார் இன்னும் தேவையா?' என்பதைக் காட்டிலும், "பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு நாம் இன்னும் விடை கண்டுவிட்டோமா?' என்பதே முக்கியமான கேள்வி.
அந்தக் கேள்விகளுக்கு சமூகத்தின் பல தளங்களிலும் இன்னும் "இல்லை' என்பதே பதிலாக இருக்கும் வரை, பெரியார் எனும் பேராளுமையின் சிந்தனைத் தேவை தமிழ்ச் சமுதாயத்தில் தொடர்ந்து இருக்கும்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே பேச்சுப்போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்றுள்ளீர்கள். உங்களுக்குள் ஒரு பேச்சாளரும் இருப்பதை எப்போது கண்டுகொண்டீர்கள்?
சிறுவயதில் யாருடனும் அதிகம் பேசாத, தனிமையை விரும்பிய, வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணாகவே இருந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வி பயின்றேன். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, என் தமிழாசிரியை இ.சரோஜா என்னை அழைத்து, "இந்த ஆண்டு 7-ஆ சார்பாக நீதான் பேச்சுப்போட்டியில் பங்கேற்கவேண்டும்' என்று கூறினார். அவரே உரையைத் தயாரித்துக் கொடுத்து, ஏற்ற இறக்கம், உச்சரிப்பு எனக் கடுமையாகப் பயிற்சியளித்தார். "எப்போதும் முதல் பரிசு பெறும் ஒரு மாணவியை நீ வெல்லவேண்டும்' என்று என்னைத் தயார்படுத்தினார். அன்று முதல் இன்று வரை முதல் பரிசுதான்!
பள்ளி நாட்களிலேயே மேடைப் பேச்சுக்கான உரையை நானே தயாரிக்க, என் ஆசிரியர்கள் பயிற்சியளித்தனர். பின்னர் தன்னியல்பாகவே உரைகளைத் தயாரித்து பேசத் தொடங்கினேன். கல்லூரிக் காலத்தில் குறிப்புகள் ஏதுமின்றிப் பேசத் தொடங்கியபோது, நான் மேடைக்கு வருகிறேன் என்றாலே பெருங்கூட்டம் கைதட்டலுடனும் விசிலுடனும் காத்திருக்கத் தொடங்கியது. பின் னர், அண்ணா பல்கலைக்கழகத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பட்டிமன்றம், வழக்காடு மன்றத்தில் பங்கேற்றேன். என் உரையைக் கேட்டவர்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தனர். தலைமையேற்ற எங்கள் அணியே முதல் பரிசையும் பெற்றது. இன்ண்ப்க்ங்ழ்ள் ஆள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் ர்ச் ஒய்க்ண்ஹ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போட்டிகளில் கல்லூரிக்காகப் பேசி சுழற்கேடயங்களையும் வென்றிருக்கிறேன். எந்த நேரத்திலும், எந்தத் தலைப்பிலும் முன்னறிவிப்பின்றி பேசும் திறனைப் பெற்றேன். இன்று அரசு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தல், சூழலியல் உரைகள், நூல் விமர்சனங்கள், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கக நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து பேசிவருகிறேன். இந்தப் பேச்சாற்றல் மேடைக்கு மட்டுமல்ல; இரு மாநில நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விவாதங்களிலும் அறிவார்ந்த தயாரிப்புடன், அனைவரையும் கேட்க வைக்கும் குரலின் மிடுக்குடன் மாநில நலனுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி.
தங்களின் படைப்புகளுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகள், பரிசுகளைப் பெற்றிருக்கிறீர்கள். அவற்றுள் மனதுக்கு மிகவும் பிடித்தது எது?
ஒவ்வொரு விருதும் எனக்கு ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் அளித்தவை என்பதால், ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது.
நம்மாழ்வாரின் பேத்தியுடன் நான் விளையாடச் செல்லும்போது, அய்யாவிடம் நேரில் கதை கேட்கும் வாய்ப்பு பெற்றவள் நான். பின்னாளில் மறைநீர் நூலுக்காக "நம்மாழ்வார் நினைவு விருது' பெற்றபோது பெரிதும் மகிழ்ந்தேன்.
படைப்பு வழங்கிய "இலக்கியச் சுடர் விருது' அன்னையின் அங்கீகாரத்திற்கு ஈடானது. "சோறு - உணவு அரசியல்' நூலுக்காகப் பெற்ற "அறமனச் செம்மல் சீனு சின்னப்பா விருது' வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்தது. பரிவட்டம் கட்டி, பூரணப் பொற்குடத்துடன், மலர்மாலை அணிவித்து, மேளதாளத்துடன் அழைத்துச் சென்றது மிகப்பெரிய மரியாதையாக உணர்ந்தேன்.
சுதந்திர தினத்தையொட்டி பாரதி இலக்கியப் பேரவை வழங்கிய விருதும் சிலிர்ப்பூட்டிய அனுபவம். தேசியக்கொடி பறக்கும் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாரதி-செல்லம்மாள் வேடமணிந்த மாணவர்களின் வாழ்த்துகளுடன் விருது பெற்றது மறக்கமுடியாதது.
ஒவ்வொரு பொறியாளரும் பெற விரும்பும் சர். ங. விஸ்வேஸ்வரய்யா பெயரிலான "சீர்மிகு பொறியாளர் விருது'ம் பெரும்பேறு. எல்லாவற்றுக்கும் மகுடமாக, ஊழலற்ற அரசுப்பணிக்காகப் பெற்ற பாராட்டிதழை என் தந்தைக்கு ஆற்றிய கடனாகக் கருதுகிறேன். அவரும் ஊழலற்ற அரசுப்பணிக்காக விருதுபெற்றவர்.
இப்போது புதிதாக என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
தமிழ் - ஒரு திணை மொழி, இளையோருக்கான சூழலியல் கதைகள் தொகுப்பு, மலையத்தி நாவல் ஆகியவற்றில் தற்போது பணியாற்றிவருகிறேன். குறிப்பாக, இளைய தலைமுறையிடம் சூழலியல் உணர்வைக் கதைகளின் வழியாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)