Economy, business and finance
தேங்காய் ஏற்றுமதி விலை கிலோ 70 ரூபாயாக உயர்வு

சென்னை: தேங்காய் ஏற்றுமதி விலை இரண்டாண்டுகளுக்கு முன் பு கிலோ சராசரியாக 25 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 55 - 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் கூறியதாவது:
நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் 31 சதவீதம் பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்திலிருந்து கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஏமன், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கடுத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகிறது.
ஏற்றுமதிக்கான ஒரு தேங்காய் அளவு 13 அங்குல சுற்றளவும், 400 - 500 கிராம் எடையும் இருக்க வேண்டும். ஒரு மூட்டைக்கு 13 கிலோ அல்லது 25 தேங்காய்கள் இடம்பெற வேண்டும். ஒரு கன்டெய்னருக்கு கிட்டத்தட்ட 18,000 தேங்காய்கள் அனுப்பப்படும். மேற்காசிய போர் பதற்றம் குறைந்த பின் தற்போது தேங்காய் ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் 1கிலோ தேங்காய் சராசரியாக 25 ரூபாய்க்கும், கடந்தாண்டு 40 முதல் 45 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. எப்போதும் தேங்காய் ஏற்றுமதி விலை 25 - 30 ரூபாய்க்குள் இருந்த நிலையில், தற்போது 3 மடங்கு உயர்ந்துள்ளது.
தேங்காய் விலை உயர்வால் ஏற்றுமதி செலவு அதிகரித்துள்ளது. போதுமான மழை இல்லாததால் உற்பத்தி குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஏற்றுமதிக்கான தரமான தேங்காய் கிடைப்பது சிரமமாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.