Politics
விவசாய நிலம்! வீட்டுமனை! விஜய் அரசின் அரசாணை !

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விவசாய விளை நிலங்கள் சமீபகாலமாக எங்கு திரும்பினாலும் வீட்டுமனைகளாக மாற்றப் பட்டு வருவது விவசாயிகளையும், பொதுமக்களை யும் வேதனைப்பட வைத்திருக்கிறது.
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷெல்கேஸ் உள்ளிட்ட கனி மங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு அதனை எடுப்பதற்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத் தனர். அதற்கு எதிராக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடை பெற்றன. அதன் விளைவாகத்தான் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இது விவசாயத்திற்கான பூமி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமை வேறுமாதிரியாக மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் திட்டமிட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுவருகிறது என விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் தலை மையில் மாதம் தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் கூறிவருகின்றனர்.
ரியல் எஸ்டேட் மாபியா நெருக்கடிக்கு ஆளாகும் விவசாயிகள், ”விவசாய நன்செய் நிலங் களில் விவசாயம் அல்லாத மேம்பாடுகள் வீடு மற்றும் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியரிட மிருந்து தடையில்லாச் சான்று பெற்றபின்னரே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதிகோரி அளிக்கவேண்டும். வேளாண்மை நன்செய் நிலங்களில் மாவட்ட ஆட்சியர் அனுமதிபெறாமல் மண் நிரப்புதலோ, கட்டடங்கள் கட்டவோ கூடாது. நஞ்சை நிலங்களில் கட்டடங் கள் கட்டுபவர்கள்மீது அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண்மை நஞ்சை நிலங்களில் மாவட்ட கலெக்டரின் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட வரைபட அங்கீகாரம் மற்றும் குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கக்கூடாது. மேலும் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களில் நீர்நிலைகளான வாய்க்கால்கள், கால்வாய், குளம், ஏரி, ஆறு, புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங் கள், வக்ஃபு வாரிய சொத்துக்கள், சமய அறக் கட் டளை நிறு வனத்தின் நிலங் கள், விண்ணப்ப தாரருக்கு உரி மையில்லாத பிற நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது ஆய்வுசெய்யப்படும். விவசாயம் செய்ய லாயக்கற்ற நிலம், அந்த இடம் பாசன வசதியற்ற நிலம் என்பதை உறுதிசெய்த பின்னரே விவசாயமல்லாத பிற பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கவேண்டுமென அரசால் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த உத்தரவு ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. கேரளாவில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் இருந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். அதேபோல தண்ணீர் செல்லும் வசதியிருந்தும் நிலங்களை தரிசாகப் போட் டாலும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கிறது. விதிமுறைகளை அதிகாரிகள் செயல்படுத்தினால்தான் அதற்கு மதிப்பிருக்கும். டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் உணவுத் தேவையில் மூன்றிலொரு பங்கை நிவர்த்திசெய்கிறது. ஏற்கனவே வறட்சி, காவிரி குறித்தான குளறுபடிகள், கட்டமைப்பு வசதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, இயற்கை இடர்ப்பாடுகள், இடுபொருட்களின் விலையேற்றம் என பல்வேறு காரணங்களால் விவசாயம் பாதியாகக் குறைந்துவிட் டது. அரிசி விலை விண்ணைத் தொட்டுள்ளது. இந்த சூழலில் விவசாயிகளின் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றும் அவலம் தொடர்கிறது. இவர்கள் நீர் நிலை களை ஆக்கிரமித்துவிடுவதால் உள்ளே இருக்கும் சிறு, குறு விவசாயிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் அவலம் தொடர்கிறது. இதுபோக நான்கு வழிச்சாலை, இரட்டை ரயில்பாதை என, பல திட்டங்களுக்கு விளைநிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே விவசாய விளைநிலங்களைப் பாதுகாக்க நிர்வாகரீதியாக விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று புலம்புகிறார்கள்.
இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைத் திரட்டிவரும் சமூக ஆர்வலரும் பட்டதாரியுமான புஷ்பராஜ், "இந்தியாவிலேயே நகரமயத்திற்காக விளை நிலங்களை அழிப்பதில் தமிழகம்தான் முத லிடத்தில் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர் கள். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் கும்ப கோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். அதில் 14 ஆண்டுகளில் சுமார் 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக அதிர்ச்சியூட் டும் தகவலைத் தெரிவித்திருந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக கிராமங்கள் ஒழிந்து, விளைநிலங்கள் வீடுகளாக, கட்டடங்களாக மாறிவிட்டன. விவசாயிகளின் தொடர் நஷ்டம், அரசாங்கம் விவசாயத்திற்கு போதுமான உதவி களைச் செய்யாதது போன்ற காரணிகளால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 30,000 முதல் 50,000 ஏக்கர் வரையிலான விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் விற்கப்படுகிறது. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தா ரிட்டி எனப்படும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு விதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இது விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதிப்பதில்லை. விவசாயத்திற்கு பயனில்லாமல் இருக்கும்பட்சத்தில் அந்த விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றலாம் என்கிற ஓட்டை வழியாக உள்ளே புகுந்துவிடுகிறார்கள் ரியல் எஸ்டேட் முதலாளிகள்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மாபி யாக்களே அதிகமாக வாங்கிப்போட்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்தத் தொழில் த.வெ.க. ஆட்சி அமைந்தபிறகு மீண்டும் புற்றீசலாக வளரத்துவங்கியுள்ளது. த.வெ.கவின் முக்கிய பொறுப்பாளரும், பாண்டிச் சேரியைச் சேர்ந்த தமிழக அமைச்சரின் ஆதர வோடு ஆட்டத்தை துவங்கியுள்ளனர். மயிலாடு துறை- திருவாரூர் சாலை, திருவாரூர்- திருத்துறைப் பூண்டி சாலை, திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலை, மன்னார்குடி- கும்பகோணம் சாலை, கும்ப கோணம்- மயிலாடுதுறை சாலை, மயிலாடுதுறை- நாகப்பட்டினம் சாலை, நாகப்பட்டினம்- திருவாரூர் சாலை, திருவாரூர்- தஞ்சாவூர் சாலைகளில் எங்கு திரும்பினாலும் வீட்டுமனைகளுக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் தமிழகத்தி லேயே மயிலாடுதுறையில்தான் அதிகம் நடக்கிறது.
முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நல்லத்துக்குடி, டவுண்டேசன், முட்டம், வேப்பங்குளம் என பல விவசாய கிராமங்களையும் நில விற்பனைக்காக அழிக்கத் துவங்கிவிட்டனர். இதற்காக கடற்கரை ஓரமுள்ள கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதில் சவுடு மண் குவாரிக்கான அனுமதியை வாங்கி அங்கிருந்து கொண்டுவந்து விளைந்த நிலத்தை தூர்த்து வீட்டு மனைகளாக்கு கின்றனர். ஆக வீட்டு மனைக்காக இருவேறு இடங்களில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது. நல்லத்துக்குடியில் நூறு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை நிலத்தின் உரிமையாளரிடம் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றிவருகின்றனர். அங்கு செல்ல வயல்காட்டு பாதைகள்தான் இருக்கிறது. அதற்கு இடையில் வாய்க்கால்களை மூடிவிட்டனர். இதுகுறித்து ஆதாரங்களோடு மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களின் ஆக்கிரமிப்பால் உள்ளே இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகும் அபாயம் உள்ளது. நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்''’என்கிறார் ஆத்திரத்துடன்.
கடைமடை பாசனதாரர் சங்க தலைவரான இளஞ்செழியன், "நெற்களஞ்சியமாகத் திகழும் டெல்டாவில் விவசாய நிலங்கள் மனைகளாக மாறும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். விவசாயத்தை சார்ந்துள்ள லட்சக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் உரிய திருத்தங் களை மேற்கொண்டு விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்''’என்கிறார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தவரும் முன்னாள் ரூரல் ஊராட்சி மன்றத்தலைவருமான தமிழரசன் கூறுகையில், "ஒருகாலத்தில் விவசாய நிலங்கள் பெரும் பணக் காரர்கள், ஜமீந்தார்கள், மிராசுதாரர்களிடமும், மடங்களிடமும், ஆதீனங்களிடமுமே இருந்தன. காலப்போக்கில் அவர்கள் நகரத்தை நோக்கிச் சென்றதாலும், விவசாயத்தில் அதிக லாபமில்லை என்பதாலும் அவர்களின் நிலங்களை நம்பகமான வர்களிடம் குத்தகைக்குக் கொடுத்தார்கள். குத்தகைக்கு வாங்கியவர்கள் வறட்சி, பெருமழை என இயற்கை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் போராடி விவசாயம் செய்வார்கள், அப்படி விவசாயம் செய்யும் குறுசிறு விவசாயிகளே டெல்டா மாவட்டங்களில் அதிகம். உழைப்பை முழுமையாகச் செலுத்திப் போராடுவார்கள். அப்படிப்பட்ட நிலங்களை குறிவைத்து நிலத்தின் உரிமையாளர்களைத் தேடிக்கண்டுபிடித்து நேரடியாக அவர்களிடம் விலை பேசி பத்திரப் பதிவு செய்துகொண்ட பிறகே விவசாயம் செய்யும் விவசாயிகளை அப்புறப்படுத்துவார்கள்.
மயிலாடுதுறையில் நல்லத்துக்குடி கிராமத்தில் பல வருடங்களாக சாகுபடி செய்துவந்த எலத்தூர் ஜமீனுக்கு சொந்தமான நிலத்தை அவர்களை தேடிக் கண்டுபிடித்து வாங்கி, குத்தகைதாரர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். விவசாய நிலங்களை அழித்து ஒரு புதிய நகரத்தை உண்டாக்குகிறார்கள். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியரும், அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு சைலண்ட் மோடில் உள்ளனர்''’என்கிறார்.
புகார் குறித்து திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டோம், “"மனுக் கள் கிடைத்ததும் உரிய ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள் ளோம்''’என்கிறார்கள் அலட்சியமாக.
இந்நிலையில்... சத்தமில்லாமல் விவ சாய நிலங்களை அழிக்க அரசாணை வெளியிட் டுள்ளது விஜய் அரசாங்கம். தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் குக்கிராமங்கள் வரை பரவி விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் வரை புதிய வீட்டுமனைப் பிரிவுகளுக்கு தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திட்டம் (டி.டி.சி.பி) இயக்குநரகத்தில் அனுமதி வேண்டுமென்றால் மனை போடப்பட்ட இடம் விவசாய நிலம் இல்லை என்கிற சான்றிதழ் தரவேண்டும். அதற்கு கிராம நிர்வாக அலுவலர், மாவட்டத்திலுள்ள வேளாண்மை இணைஇயக்குந ரின் என்.ஓ.சி பெறவேண்டும். நஞ்சை நிலமென்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும். இப்படியொரு கிடுக்குப்பிடி போட்டுவைக்க காரணம் விவசாய நிலங்களை வீட்டு மனை களுக்காக விற்கக்கூடாது என்பதற்காகவும், விவசாயத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற் காகவே. இதில்தான் மாற்றத்தைக் கொண்டுவந்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அரசாணையை நம்மிடம் காட்டிய திருவண்ணாமலை விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 31.7.2026-ஆம் தேதி அரசாணை எண் 149 மூலம் விளைநிலங்கள் வகைமாற்றுவதில் இனி வேளாண்மை இணை இயக்குநருக்கு தரப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்கிறது. அதன்பின் 17.8.2026-ஆம் தேதி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், விவசாய நிலங்கள் வகைமாற்றப்படும்போது வேளாண் இணை இயக்குநரிடமிருந்து அவசியம் அனுமதி (என்.ஓ.சி) பெறவேண்டும் என்பது ரத்து செய்யப்படுகிறது. ஆவணங்களை பார்த்து டி.டி.சி.பி. இயக்குநரே அதற்கு அனுமதி வழங்கு வார். நகர மற்றும் ஊரக திட்டமிடல் ஆணை யாளரின் அதிகாரத்தின்படி இனி மனைகளுக்கு அனுமதி வேண்டி வரும் விண்ணப்பத்தில் அது விளைநிலமா அல்லது வறண்ட நிலமா என்பதை அந்தந்த மாவட்ட- நகர ஊரக திட்டமிடல் அதிகாரிகளே நேரில் சென்று ஆய்வுசெய்து முடிவுசெய்து அனுமதியளிப்பார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் இது விவசாய நிலம் இல்லை, கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் செய்யாத வறண்ட நிலமாக இருக்கிறது என்பதற்கான வி.ஏ.ஓ.வின் அடங்கல் சான்றிதழ் தரவேண்டும். இப்போது அதனை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்கள். ஆய்வின்போது ஓராண்டு விவசாயம் செய்யாமல் இருந்தால் போதும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். வாரந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிது புதிதாக மனைப்பிரிவுகள் உருவாக்கி டி.டி.சி.பி. அனுமதி வேண்டி விண்ணப் பிக்கிறார்கள். அங்கே விதி முறைகள் காற்றில் பறக்கின் றன. அதற்காக லட்சங்கள் முதல் கோடிகள் வரை லஞ்சமாக கைமாறுகிறது. அதன்பின் அனுமதி வழங்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். விவசாய நிலமாக இருப் பதை தரிசு நிலம்தான் எனச் சொல்லி அனுமதி கேட்டபோது தராமல் இழுத்தடித்தனர். வேளாண் மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாய நிலம் மனைகளாக மாறுவதைத் தடுக்கும் அதிகாரம் இருந்தது, அதைவைத்து சில அதிகாரிகள் தடுத்துவந்தார்கள். அதைத்தான் பறித்து விவசாய நிலங்கள் விலைமனைகளாக மாற வழிசெய்து தந்துள்ளது த.வெ.க. அரசு. பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தின் விவசாயத்தை காப்பாற்றிவிட்டேன் எனச்சொல்லிக்கொண்டே தமிழ்நாடு முழுவதுமுள்ள விவசாய நிலங்களை அழிக்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்''’என புலம்பினார்கள் விவசாயிகள்.
இதுகுறித்து நாம் அரசு தரப்பில் விசாரித்த போது, "ரியல் எஸ்டேட் சங்கத்தினர் அமைச்சர் ராஜ்குமார், உயரதிகாரிகளை சந்தித்து, புதுமனை கள் போடும்போது வேளாண்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பதால் அனுமதி பெற தாமத மாகிறது. அவர்களும் லஞ்சம் கேட்கிறார்கள். பணம் தரவில்லையென்றால் இது விவசாய நிலமில்லை என்பதற்கான சான்றிதழ் தரமறுக்கிறார்கள். ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய் கேட்கிறார்கள். இதனால் லஞ்சம் அதிகமாகத் தரவேண்டியிருக்கிறது. லஞ்சத்தை ஒழிக்கவேண்டும் என்றால் வேளாண் துறையிடமிருந்து என்.ஓ.சி. வாங்கவேண்டும் என் பதை ரத்து செய்யவேண்டும். வருவாய்த் துறையின ருக்கே அனைத்தும் தெரியும்போது அவர்கள் அனுமதி தந்தால் போதுமானதாக மாற்றவேண்டும். இதே கோரிக்கையை கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் சொன்னோம். அவர்கள் தேர்தல் முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் எனச் சொன்னார்கள். வேளாண்துறையின் அனுமதி தேவையில்லை என்றால் லஞ்சம் வாங்குவது குறைந்துவிடும் என்பதுபோல் பில்டப் செய்து இப்படியொரு அரசாணையை திருத்தி வெளியிடச் செய்துவிட்டார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர், துறை அதிகாரிகளுக்கு பெரியளவில் நிதி தந்ள்ளார்கள்'' என்கிறார்கள்.
"விவசாயிகளின் நண்பன், பாதுகாவலன், விவ சாய கடன்களை ரத்து செய்துவிட்டேன்...' எனச் சொல்லிக்கொண்டே விளைநிலங்களை... விலை நிலங்களாக மாற்ற ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு வழிசெய்து தந்துள்ளது விஜய் அரசாங்கம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)