Politics
ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏவின் பேச்சால் சர்ச்சை; எதிர்க்கட்சிகளுக்கு பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

திருவண்ணாமலையில் கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய வாணியம்பாடி ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, “சட்டமன்றத் தேர்தல் முடிந்தப் பிறகு என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணம் எடுத்து எங்களிடம் அமைச்சர் பதவி தருகிறேன், கையெழுத்து போடுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் இல்லை, கொள்கைக்கு சார்ந்தவர்கள், எங்களுடைய இயக்கம் இந்திய முஸ்லீம் கொள்கையுடன் தான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விலக்கிவிட்டோம்.
லெட்டர் பேடை தயாரித்து பணத்தோடு வந்து பேசினார்கள். எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சி வேண்டுமா? போக்குவரத்து வேண்டுமா என்று பேசினார்கள். எங்களுக்கு அல்லா பதவி கொடுக்கக் கூடியவர்கள், உங்கள் பதவிக்கு எங்களுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று சொன்னோம்” என்று குற்றம்சாட்டினார். எந்த கட்சியையும் குறிப்பிடாத அவர், தவெகவினர் தான் குதிரை பேரம் நடத்தி பணம் கொடுக்க முயன்றுள்ளனர் என்று கூறியதாக செய்தி வெளியானது. இது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐ.யூ.எம்.எல் கட்சி எம்.எல்.ஏ தவெகவை சொல்லவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாலர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “முஸ்லிம் லீக்கின் சார்பாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு நிலைகளில் ஆட்சியாளர்களுக்கு துணையாக நின்று சமுதாயத்தினுடைய பிரச்சனைகளையும் மற்றுமுள்ள காரியங்களையும் சிறப்பாக செய்து வருகின்றார்கள். ஆனால் எதிரணியில் இருக்கக்கூடியவர்கள் அவ்வப்போது தவறான பிரச்சாரங்களை செய்து குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றார்கள். எங்களுடைய வாணியம்பாடி எம்எல்ஏ பேசியது கூட இன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அவர் எந்த கட்சியும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
நடைபெற்று முடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி யார் அமைப்பது என்ற கால தாமதத்தின் காரணமாக பல கட்சிகளிலும் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதன் காரணமாக குதிரை பேரம் நடந்தது என்று தான் அவர் சொல்லிருக்கிறார். ஆனால் தவெகவை தான் குதிரை பேரம் நடத்துகின்ற ஒரு தவறான கருத்தை சொல்கிறார்கள். அதை இந்தியன் முஸ்லிம் லீக் சார்பாக கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம். தேர்தலுக்கு பிறகு நடந்த சூழ்நிலைகளை நாம் அரசி ஆராயும் பொழுது நடந்த விஷயங்களை பேசினால் மேலும் பிரச்சினைகள் தான் அதிகமாகும். அதை விடுத்து இப்பொழுது ஆட்சி அமைந்திருக்கின்றது. இந்த ஆட்சியில் என்ன நன்மையான காரியங்கள் இருக்கிறதோ அதை பாராட்ட வேண்டும். குறைபாடுகள் இருந்தால் அதை ஆரோக்கியமாக கண்ணியமாக சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு. அதை விட்டுவிட்டு தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்வதன் மூலமாக எதையும் சாதிக்க முடியாது.
எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக பாஜகவினுடைய துணையோடு கவர்னர் ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டி மதசார்பற்றதன்மை தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் துணை நின்று இருக்கின்றோம். தேசிய அளவிலே எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றிருக்கின்றது. அந்த கூட்டணியில் நாங்கள் தொடர்கின்றோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)