மடத்துக்குளத்தில் விளை பொருட்கள் ஏலம் கொப்பரை கிலோ 160.15க்கு விற்பனை
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.54.25க்கும், கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ.160.15க்கும் விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ–நாம் திட்டத்தின் கீழ், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு, 2,623 கிலோ எடையுள்ள, 5,420 தேங்காய்களை, 30 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில், 7 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ. 54.25க்கும், குறைந்த பட்சமாக, ரூ.48 என சராசரியாக, ரூ.52க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 888.
அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 105 விவசாயிகள், 255 மூட்டை அளவுள்ள, 8,136 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.
இதில், 7 வியாபாரிகள் பங்கேற்று, முதல் தரம் அதிக பட்சமாக, கிலோ ரூ.160.15க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.140 என, சராசரியாக, ரூ.152க்கு விற்பனையானது.
அதே போல், இரண்டாம் தரம், அதிகபட்சமாக, கிலோ ரூ.139க்கும், குறைந்த பட்சமாக, 110 என, சராசரியாக, 121க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 11 லட்சத்து, 69 ஆயிரத்து, 714.
மேலும், 103 மூட்டை அளவுள்ள, 2,428 கிலோ, தேங்காய் தொட்டியை, 24 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ–நாம் ஏலத்தில், 7 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் தொட்டி, ரூ.35.35க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.85 ஆயிரத்து, 814.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் இ–நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.
மேலும், இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மேரி ஹில்டா ஆகியோர் தெரிவித்தனர்.