பெருங்குடி குப்பை கிடங்கால் பல்லாவரம் ரேடியல் சாலைக்கு...பேராபத்து! : வடிகால்களை அடைத்ததால் தென் சென்னைக்கு வெள்ள அபாயம்

சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் மட்கி மண்ணான குப்பை கழிவுகள், தினமும் 5 அடி வீதம் சரிந்து, பல்லாவரம் ரேடியல் சாலையில் தேங்கி வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சரியும் கழிவுகளை தடுக்க முடியாமல் மாநகராட்சி திணறி வரும் நிலையில், மூன்று நீர்வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தென் சென்னைக்கு வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 9 முதல் 15 வரையுள்ள ஏழு மண்டலங்களில் தினமும் 2,700 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.
இவை, பல்லாவரம் - ரேடியல் சாலையை ஒட்டி 220 ஏக்கர் பரப்பு உடைய பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.
கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வருவதால், கிடங்கில் 35 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை தேங்கியுள்ளது.
இதில், வீட்டு குப்பை மட்டுமின்றி, மருத்துவம், தொழிற்சாலை, ரசாயனம், மின்சாதன கழிவுகள் என, கலவையாக கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகளின் தாக்கத்தால், குப்பை கிடங்கை சுற்றி 5 கி.மீ., சுற்றளவில் நிலத்தடிநீர் மாசடைந்துள்ளது.
மேலும், குப்பை கிடங்கில் வெளியேறும் மீத்தேன் வாயுவால் அவ்வப்போது தீ பிடித்து, நச்சுப்புகை பரவுவதால் சுற்று வட்டார மக்கள், கண் எரிச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்பிரச்னையை தீர்க்க, 2022ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக 400 கோடி ரூபாயில், 'பயோமைனிங்' முறையில் குப்பை கழிவுகள்களையப்பட்டு, அவற்றில் இருந்து மணல், கல், இரும்பு, மரப்பட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் தனித்தனியாக பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இது போல பிரிக்கப்பட்ட குப்பையை ஒரு பக்கமாக நகர்த்தி, பொக்லைன் இயந்திரங்களால் அழுத்தி, மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. குப்பை காற்றில் சிதறாமல் இருக்கவும், இடப்பற்றாக்குறையை தீர்க்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து அழுத்தி வருவதால், கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட கழிவுகள் மக்கி மண்ணாகி, ரேடியல் சாலையில் சரிந்து வருகின்றன.
அழுத்தத்தால் வெளியேறும் மண் கழிவுகள், ரேடியல் சாலையில் உள்ள மூன்று நீர்வழி தரைப்பாலங்களை அடைத்துள்ளன. இதனால், தரைப்பாலத்தில் நீரோட்டம் தடைபட்டுள்ளது. ரேடியல் சாலையில், வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி மழைநீர் வடிய, 2 கி.மீ., துாரத்தில், 30 அடி அகலம் வீதம் 17 இடங்களில் நீர்வழி தரைப்பாலங்கள் உள்ளன.
இதில், மூன்று தரைப்பாலங்கள் முழுதாக அடைபட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி, ஆதம்பாக்கம், வேளச்சேரி, தரமணி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மேலும், தினமும் 5 அடி வீதம் மண் கழிவுகள் சரிவதால், ரேடியல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையில் சரியும் மண்ணை, மாநகராட்சி அள்ளி வெளியேற்றுகிறது. ஆனாலும் மேலும் பல மடங்கு மண் சரிவதால், ரேடியல் சாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
'பயோமைனிங்' செய்த குப்பையை ஒரு பக்கமாக குவித்தால் தான், புது குப்பையை கொட்ட முடியும். இதற்காக, பொக்லைன் இயந்திரங்களால் குப்பையை அழுத்தி உயரத்தை குறைக்கும்போது, அதனடியில் ஏற்கனவே மக்கியுள்ள மண் கழிவுகள் ரேடியல் சாலையில் சரிகின்றன.
அச்சாலையை ஒட்டி செல்லும் 1,000 எம்.எம்., உடைய கழிவுநீர் குழாயில் சேதம் ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி, மண் சரிவு அதிகரிக்கிறது.
கனமழை பெய்தால், மண் சரிவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கழிவுநீர் குழாயை மாற்றி அமைத்து, மண் கழிவுகள் சரியாதவாறு, இரும்பு தடுப்பு சுவர் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினர்.
ரேடியல் சாலை வழியாக, தினமும் சோழிங்கநல்லுார் செல்கிறேன். மண் சரிவு பகுதியில் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. ரேடியல் சாலையை மூடும் நிலை ஏற்பட்டால், ஐ.டி., நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். மழைக்காலத்தில், இப்பாதிப்பு மேலும் கடுமையாக இருக்கும்.
அ.ரோகிணி, 28, வேளச்சேரி.
ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிவதால், வீட்டில் இருந்து ரேடியல் சாலை வழியாக, தினமும் செல்கிறேன். சாலையில் சரிந்துள்ள மண் கழிவால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால், சுவாச பிரச்னையும் ஏற்படுகிறது.