’தாகத்தில் தவிக்கும் இலங்கை’; எல்-நினோவின் கோர முகம்

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன. அது மனித குலத்துக்கே மிகப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, எல்நினோ தொடங்கியது முதலே உலகின் பல்வேறு நாடுகளில் வறட்சியும் வெள்ளமும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் கடும் வறட்சியும், தெற்காசிய நாடுகளில் வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாக்கினர். இந்நிலையில், இந்த எல்நினோவால் தெற்காசிய நாடான இலங்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு அதிக மழை பொழிவைக் கொடுக்கும் தென்மேற்குப் பருவமழை, எல்-நினோவால் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை குறைவாகவே பெய்துள்ளது. அதே போல, மிதமிஞ்சிய வெப்பத்தால் அணைகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து நீர் வேகமாக ஆவியாகி, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால், 6 மாகாணங்களைச் சேர்ந்த 7 பிரதான மாவட்டங்கள் மிக மோசமான நேரடிக் குடிநீர் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே, அனுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி கூறுகையில் “சுட்டெரிக்கும் வெப்பம், பொய்த்துப் போன மழைப்பொழிவு ஆகியவற்றால் 25 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் கடும் குடிநீர் பஞ்சத்தைச் சந்தித்து வருகிறார்கள். தேசிய பேரிடர் மையத் தரவுகளின்படி, 28 மண்டலங்களில் 30,011 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 94 ஆயிரம் மக்களுக்குள் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அதே போல, வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் வறட்சியால் கருகிப்போயுள்ளன. விலங்குகளும் குடிக்க நீரின்றி மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் வருகின்றன. இலங்கையை சுட்டெரிக்கும் வெப்பமும், வறட்சியும், குடிநீர் பஞ்சமும் தற்காலிக இயற்கை சீற்றம் இல்லை. இது, உலகளாவிய காலநிலை மாற்றம் நமக்கு விடுத்துள்ள தீவிர எச்சரிக்கை மணி என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)