Politics
“என் பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி எப்படி வந்தது?” - தத்தளிக்கும் தந்தை... மறுக்கும் மருத்துவமனை!

ஒரு பாட்டில் ரத்தம்... ஒரு குடும்பத்தின் 8 ஆண்டு கண்ணீர்!
“கோயமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில ரத்தம் ஏத்துனதாலதான் ரெண்டு வயசா இருந்த என் பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி வந்துச்சு. ஆனா, ‘பழனியில மொட்டைபோட்டாலும் இந்த நோய் வரும்’னு பழனிக்கே போகாத எங்களைப் பார்த்து சொல்றாங்க. என் பொண்ணு படுற கஷ்டத்தையும், எங்க குடும்பத்தையே ஒதுக்குறதையும் பார்க்குறப்ப நெஞ்சே கனக்குது சார்...” என்று கண்ணீர் வடிக்கிறார் விஸ்வநாதன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள இனாம்புதூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். 2018-ல் உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த தன் மகளுக்கு ரத்தம் ஏற்றிய பிறகு, அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததாகக் கூறுகிறார். மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால்தான் தொற்று ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டி, தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை கோரி கடந்த எட்டு ஆண்டுகளாகப் போராடிவருகிறார்.
இந்தத் தகவல் நமக்குக் கிடைத்ததும் விஸ்வநாதனிடம் பேசினோம். “15 வருஷத்துக்கு மேல திருப்பூர்ல மனைவி, புள்ளைங்களோட தங்கி தறி ஓட்டுற வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். 2016-ம் வருஷம் எங்களுக்கு கருப்பசாமி, கற்பகம்னு இரட்டைப் புள்ளைங்க பிறந்தாங்க. 2018-ம் வருஷம் கற்பகத்துக்குக் காய்ச்சல் வந்ததால திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனோம். அங்கருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினாங்க.
அங்க, ‘ரத்தம் குறைவா இருக்கு, ரத்தம் ஏத்தணும்’னு சொல்லி, 26 வயசு பயிற்சி மருத்துவ ஊழியர் ஒருத்தர் என் பொண்ணுக்கு ரத்தம் ஏத்துனாரு. கொஞ்ச நேரத்துலயே நிறுத்திட்டாரு. ஏன்னு கேட்டதுக்கு, ‘வயசானவரோட ரத்தத்தை ஏத்திட்டோம், அதான் நிறுத்திட்டோம்’னு சொன்னாரு. சில நாள்ல வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் காது பக்கத்துல கட்டி வர ஆரம்பிச்சுது. மறுபடியும் கோவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனப்போ தான், ‘உங்க பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி இருக்கு’னு சொல்லி எங்க தலையில இடிய இறக்கிட்டாங்க.
`எங்க மூணு பேரையும் சோதனை பண்ணிப் பார்த்தப்போ, யாருக்குமே ஹெச்.ஐ.வி இல்லை. உங்க ஆஸ்பத்திரியில ரத்தம் ஏத்துனதாலதான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்கு’னு கோவை அரசு ஆஸ்பத்திரியில முறையிட்டேன். அதுக்கு, ‘வெளிய சொல்லாதீங்க, ஆஸ்பத்திரிக்குக் கெட்ட பேரு வந்துடும்’னு சொல்லி அனுப்பிட்டாங்க. அப்புறம் முதல்வர், கலெக்டர், டீன் என எல்லார்கிட்டயும் மனு குடுத்தேன். எதுவும் நடக்கலை.
‘எங்க சைடுல தப்பான ரத்தம் ஏத்தலை. பழனியில மொட்டை போட்டாக்கூட ஹெச்.ஐ.வி வரும்’னு சொல்லி எங்களைக் காயப்படுத்துறாங்க. ஊர்ல சில பேர் எங்களை ஒதுக்கி, நான்தான் எங்கயோ போய் இந்த நோயை வாங்கிட்டு வந்து பொண்ணுக்குப் பரப்பிட்டேன்னு பேசுறாங்க. அந்தப் பேச்சே என்னை மனசளவுல கொன்னுக்கிட்டு இருக்கு. என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கிற வரை நான் ஓய மாட்டேன்” என்றார் ஆவேசமாக.
அடுத்துப் பேசிய அவருடைய மனைவி சித்ரா, “அடிக்கடி காதுக்குக் கீழ கட்டி வருது. ஈறுல ரத்தம் வருது. ஜுரமும் வயித்துவலியும் படுத்தி எடுக்குது. மாத்திரை சாப்பிடலைன்னா இன்னும் அதிகமாகிடுது. என் புள்ளை படுற பாட்டைப் பார்த்து தாயா மனசு உடைஞ்சுபோச்சு. ‘இந்த நோயுள்ள புள்ளையை ஏன் வீட்டுல வெச்சிருக்கீங்க, அநாதை இல்லத்துல விட்டுருங்க’ன்னு சொந்தக்காரங்க வேற குத்திக்காட்டுறாங்க. அநாதை இல்லத்துல விடத்தானா வயித்துல சுமந்து பெத்தேன்... ஆஸ்பத்திரி அஜாக்கிரதையால என் புள்ளை வாழ்க்கையே போச்சு. அதுக்கு காரணமானவங்க மேல நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு அரசு நிவாரணம் தரணும்” என்று கண்ணீர்விட்டார்.
இந்த விவகாரம் குறித்து, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலியிடம் பேச முயன்றோம். அவர் மறுத்த நிலையில், நம்மிடம் பேசிய குவாலிட்டி மேனேஜர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், “அந்தச் சிறுமிக்கு ரத்தம் கொடுத்த டோனருக்கும், அதே டோனரிடம் ரத்தம் பெற்ற மற்ற நோயாளிகளுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இல்லை. முறையாகப் பரிசோதித்த பிறகே ரத்தம் ஏற்றியதால், இங்கு கொடுத்த ரத்தத்தால் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. 2018-க்கு முன்பு வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம். மேலும், ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் அவர்கள் திருப்பூரில் சுயமாகப் பரிசோதனை செய்துள்ளனர்” என்றார்.
அதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் பேசினோம். “அந்தக் குடும்பம் இரண்டு வாரங்களுக்கு முன்பும் புகார் கொடுத்ததால், டீன் பழைய ரெக்கார்டுகளை ஆய்வுசெய்தார். 2018-லேயே தலைமை அலுவலகம் நடத்திய விசாரணையில், கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டோம். இருப்பினும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய முயற்சி செய்யலாம்” என்றார்.
மணப்பாறை தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கதிரவனிடம் பேசினோம். “அந்தக் குடும்பத்தைச் சந்தித்துப் பேசி, தலைமைக்குத் தகவல் தெரிவித்து, அந்தக் குடும்பத்துக்கு என்ன உதவிகள் செய்ய முடியுமோ, அதைச் செய்ய முயல்கிறேன்” என்றார்.
எட்டு ஆண்டுகளாகக் கண்ணீருடன் போராடும் அந்தக் குடும்பத்தின் வலியைப் போக்க முன்வருமா அரசு?
