Arts, culture, entertainment and media
‘ஒன்றா... ரெண்டா ஆசைகள்...’; மீண்டும் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா!

சூர்யா - ஜோதிகா இருவரும் முதன் முறையாக ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’(1999) படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து சிறிது காலம் டேட்டிங் செய்து வந்தனர். பின்பு பெற்றோர் சம்மதத்துடன் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்கிற மகனும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி தங்களது திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்துவ முறைப்படி இருவரும் உறுதி மொழி ஏற்றுகொண்டனர். இதன் வீடியோவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் ஜோதிகா வெளியிட்ட பதிவில், “அடுத்த அத்தியாயம்... எங்கள் 20 ஆண்டுகால காதல் மற்றும் சண்டைகளைக் கொண்டாடும் விதமாக, எங்கள் திருமண உறுதிமொழிகளை மீண்டும் எடுத்துகொண்ட தருணம் இது. இது ஒரு மிகச்சரியான திருமண வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வு அல்ல. மாறாக, குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகங்கள் மற்றும் சுயநலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்வு. இது 'நாங்கள்' என்பதைக் கொண்டாடும் தருணம், அதாவது, ஒருவருக்காக ஒருவர் நாங்கள் மாறியிருக்கும் விதத்தைக் கொண்டாடும் தருணம்.
எவ்வளவு விசித்திரமான முரண் இது. ஒரு காலத்தில் எட்டாத கனவாகத் தோன்றிய ஒன்று, இன்று என் வாழ்நாள் முழுவதும் நிஜமாக மாறியிருக்கிறது. இதோ என் உறுதிமொழிகள்... நான் மகிழ்ச்சியானவளாக இருக்க உறுதியளிக்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையின் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்க நான் விரும்புகிறேன். வாழ்க்கையைக் கொண்டாட உறுதியளிக்கிறேன்... ஏனென்றால், தன்னைவிட அதிகமாக உங்களை மதிக்கும் ஒரு மனிதருடன் வாழும்போது, வாழ்க்கையே ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. ஒருபோதும் குறை கூறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்... ஏன் குறை கூற வேண்டும்? வானம் கூட பூமியைத் தொடும் பாக்கியத்தைப் பெறவில்லையே. சுற்றிலும் பாருங்கள், உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒரு வகையில் முழுமையற்றவைதான். அந்த இடைவெளிகளை நாம் எப்படி நிரப்புகிறோம் என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது. நன்றியுணர்வுடன் இருக்க உறுதியளிக்கிறேன்... என்னை அரவணைத்துப் பாதுகாக்கும் மனிதரின் மடியில் ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுவதற்கும், என் வாழ்க்கைக்கு அர்த்தமும் வாழ்வதற்கான காரணமும் தந்த என் அழகான குழந்தைகளுக்காகவும் நான் நன்றி கூறுகிறேன்.
ஆரோக்கியமாக இருக்க உறுதியளிக்கிறேன்... ஏனென்றால் அதுதான் நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து. எவ்வளவு ஆடம்பரமான வீடாக இருந்தாலும், அதில் கசிவுகள், கரையான் தொல்லைகள் மற்றும் பழுதுபார்ப்புத் தேவைகள் இருக்கவே செய்யும். சிறந்த தாயாக இருக்க உறுதியளிக்கிறேன்... சமைப்பதாலோ, சுத்தம் செய்வதாலோ அல்லது உதவி செய்வதாலோ அல்ல, மாறாக, என் புன்னகையின் மூலம். அந்தப் புன்னகை, என் குழந்தைகள் தங்கள் அப்பா-அம்மா வாழ்ந்த வாழ்க்கைக் கதையை மீண்டும் வாழ விரும்பும் அளவுக்கு அவர்களை ஈர்க்க வேண்டும். என் சூர்யா, உன்னிடம் உறுதியளிக்கிறேன்... நான் எப்போதும் அந்த 'முழுமையற்ற' மனைவியாகவே இருப்பேன், சண்டையிடுவேன், பிறகு சமாதானமாவேன், ஒவ்வொரு முறையும் உன்னுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாவேன். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் நட்பைப் போற்ற உறுதியளிக்கிறேன். ஏனென்றால், கணவராகவும் குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கும் ஒரு சிறப்புமிக்க மனிதருக்குள், ஒரு சமமான துணையாக, நம்பிக்கைக்குரியவராக, ஜாலியாக பேசும் தோழராக மற்றும் சிறந்த நண்பராக ஒருவரைக் காண்பது அரிதானது. ஆகவே, அடுத்த இருபது ஆண்டுகளை நோக்கி... முழுமையான புரிதலுடன் கூடிய, 'முழுமையற்ற' நாமாகவே பயணிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)