காவிரி தொழில்நுட்ப பிரிவு பொறியாளர் நியமனத்துக்கு தொடரும் முட்டுக்கட்டை
சென்னை: காவிரி தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை பொறியாளரை நியமிக்கும் நீர்வளத் துறையின் முயற்சிக்கு, நிதித்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
காவிரி உள்ளிட்ட பன்மாநில நதிநீர் பிரச்னைகளை கையாள, காவிரி மற்றும் பன்மாநில நதிகள் பிரிவு, 1990ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இப்பிரிவில், சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் 33 பேரும், டில்லியில் ஐந்து பேரும் பணியாற்றி வருகின்றனர். இப்பிரிவு வாயிலாக, தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
அதை அடிப்படையாக வைத்து, 30க்கும் மேற்பட்ட நதிநீர் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் வாதங்களை, தமிழக அரசின் வழக்கறிஞர்கள் முன்வைத்து வருகின்றனர்.
காவிரி மற்றும் பன்மாநில தொழிற்நுட்ப பிரிவின் தலைவராக சுப்பிரமணியன், 84 வயதை கடந்து பணியாற்றி வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களிலும், இவர் பங்கேற்று வருகிறார்.
டில்லி செல்ல உடல்நிலை ஒத்துழைக்காததால், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இவருக்கு கீழ், நீண்ட காலமாக பணியாற்றிய பொறியாளர்கள் இரண்டு பேர் உடல் நலக் குறைவு காரணமாக, பணியில் இருந்து விலகி விட்டனர். ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மட்டும் பணியில் தொடர்ந்து வருகிறார்.
உடல் நலக்குறைவு அல்லது வேறு காரணங்களால், இவர் பணியில் இருந்து விலகும்பட்சத்தில், காவிரி உள்ளிட்ட நதிநீர் வழக்குகளில், அரசு வழக்கறிஞர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, காவிரி மற்றும் பன்மாநில நதிகள் பிரிவிற்கு தலைமை பொறியாளர் அந்தஸ்தில், புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும் என, நீர்வளத்துறை பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், நிதித்துறை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. நிதித்துறை இணை செயலர் அலுவலகத்தில் ஐந்து மாதங்களாக அந்த பரிந்துரை கோப்பு காத்திருக்கிறது.
இதனால், நீர்வளத் துறை முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், புதிய பணியிடத்தை உருவாக்க, முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.