Politics
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை: தேர்வர்கள் அறிவுரைகளை பின்பற்ற வலியுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேர்முக தேர்வு அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நாளை 19ம் தேதி காலை மற்றும் மதியம் நடக்கிறது.
ஓ.எம்.ஆர்., தேர்வு எழுத விழுப்புரம் மாவட்டத்தில் நாளை காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரை 7 தேர்வு மையங்களில், 3766 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இதேபோன்று, டெஸ்கிரிப்டிவ் தேர்வை மதியம் 2:30 மணி முதல் 5:30 மணி வரை ஒரு தேர்வு மையத்தில் 14 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலையில் நடக்கும் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வர வேண்டும். காலை 9:00 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 12:30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதேபோன்று மதியம் நடக்கும் தேர்வுக்கு மதியம் 1:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வர வேண்டும். மதியம் 2:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், மாலை 5.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல் போன் மற்றும் மின்னணு வாட்ச், புளுடூத் போன்ற மின்னணு சாதனைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்களை பயன்படுத்தலாம்.
ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடும்பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து விண்ணப்பதாரர் விலக்கி வைக்கப்படுவர். தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நாளன்று காலை 6:00 மணி முதல் சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் தேர்வர்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார்.