Politics
மாநகராட்சி கலைப்பு? கவுன்சிலர்கள் கலக்கம்
தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், முதன் முறையாக தேர்தலை சந்தித்த த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்.,-வி.சி., கட்சி, இந்திய கம்யூ.,-மா.கம்யூ.,-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் ஆதரவுடன் த.வெ.க., ஆட்சி அமைத்தது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் த.வெ.க., விற்கு கவுன்சிலர்கள் இல்லை. இதற்கிடையே, எதிர்க்கட்சியான தி.மு.க., விற்கு 'செக்' விதமாக மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக தி.மு.க., வை பலவீனப்படு்த்தி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று பலத்தை நிருபிக்க த.வெ.க., தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.
குறிப்பாக, மாநகராட்சியை கலைப்பதற்கான உத்தரவு சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலுார் மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி தி.மு.க., வசம் உள்ளது. மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,-அ.தி.மு.க.,-வி.சி., கட்சி, த.வா.க., பா.ம.க.,-பா.ஜ.,- காங்., சுயேச்சைகள் கவுன்சிலர்களாக உள்ளனர். இவர்களுக்கு 2027ம் ஆண்டு மார்ச் வரை பதவிக்காலம் உள்ளது. இந்நிலையில், த.வெ.க., அரசு முன்கூட்டியே மாநகராட்சியை கலைத்து விட்டால் அரசின் சலுகை இனி கிடைக்காத நிலை ஏற்படும் என்பதால் கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
