Politics
த.வெ.க. எம்.எல்.ஏ. -தி.மு.க. சேர்மன் கூட்டு! -விருதுநகர் வில்லங்கம்!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கவிருக்கும் நிலையில், அந்தத் திட்டத்துக்கான டெண்டர் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,508 மாணவர்களுக்கு சுமார் மூன்றரை ஆண்டுகளாக காலை உணவு வழங்கி வந்த உதயா மகளிர் சுயஉதவிக் குழு, இந்த முறை டெண்டரிலிருந்து நிராகரிக்கப்பட் டுள்ளது. அதற்குப் பதிலாக ஆதவன் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு டெண்டர் கிடைத்துள்ளது.
இது வெறும் டெண்டர் போட்டியில் ஏற்பட்ட மாற்றமா? அல்லது த.வெ.க.வுடன் தி.மு.க. மறைமுகமாக கைகோர்த்திருப்பதன் வெளிப்பாடா? என்ற கேள்வி தற்போது விருதுநகர் அரசியல் வட்டாரத்தில் சுழன்றடிக்கிறது.
உதயா மகளிர் குழு தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “"இதுவரை நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தப் பணியை எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் செய்துவந்தோம். அதற்கான சான்றையும் நகராட்சி ஆணையரே வழங்கியுள்ளார். இந்த நிலையில், புதிய டெண்ட ரில் எங்கள் குழு நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊநஒ, டஎ தொடர்பான ஆவணங்கள் இல்லை என்பதே நிராகரிப்புக்கான காரணமாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. ஆனால், டெண்டர் நிபந்தனைகளில் குறிப்பிட்ட சில ஆவணங்களை பின்னர் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், டெண்டர் பரிசீலனை நடைமுறை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. டெண்டரில் பங்கேற்றவர்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கக்கூட போதிய அவகாசம் தரவில்லை அவசரமாகவே டெண்டர் முடிக்கப் பட்டுள்ளது. புதிய டெண்டரைப் பெற்றுள்ள ஆதவன் மகளிர் சுயஉதவிக் குழுவை, விருதுநகர் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் மாதவனின் சொந்தக்காரர்கள்தான் நடத்தி வருகிறார்கள். அந்தக் குழுவின் ஊநஒ, டஎ பதிவுகளில் நகர்மன்றத் தலைவர் மாதவன், அவரது மனைவி, சகோதரர் உள்ளிட்ட உறவினர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன''’என்றனர்.
ஆதவன் குழுவுக்கு டெண்டர் கிடைப்பதற் காக மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு ரூ.5 லட்சமும், அதிகாரி ஒருவருக்கு ரூ.2 லட்சமும் தந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவனிடம் பேசினோம். "ஆதவன் குழுவை என் சொந்தக்காரர்கள்தான் வைத்திருக் கிறார்கள். தி.மு.க.காரனாக இருந்துகொண்டு நான் எப்படி த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு பணம் கொடுப்பேன்?''’என்று ஒரேயடியாக மறுத்தார்.
ஆனால், ஆதவன் குழு தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், "உதயா மகளிர் குழுவின் பின்னணியில் இருப்பது 19-வது வார்டு கவுன்சிலர் உமாராணி. அக்குழுவின் தலைவியாக உமா மகேஸ்வரி இருக்கிறார். அந்தக் குழுவின் அமைப்பும், அதுதொடர்பான பல்வேறு ஆவணங்களும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அந்தக் குழுவினர்தான் எங்கள் குழு மீது அவதூறு பரப்பி வருகின்றனர்''’என்றனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ன் பிரிவு 32(1)(ங்)-ன்படி, நகர்மன்றத் தலைவர் அல்லது கவுன்சிலருக்கு நகராட்சி யுடனான ஒப்பந்தம் அல்லது நகராட்சிக்காக நடைபெறும் பணிகளின் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிப்பட்ட நலன் இருக்கக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், நகராட்சி டெண்டர் விவகாரத்தின் பின்னணியில் சேர்மனும், கவுன்சிலரும் இருப்பதாகக் கூறப்படுவது அரசு விதிகளையே கேள்விக்குறியாக்குகிறது.
நாம் விருதுநகர் த.வெ.க. எம்.எல்.ஏ. செல்வத்தைத் தொடர்புகொண்டோம். "விருதுநகர் நகராட்சியின் காலை உணவுத் திட்டத்திற்கான டெண்டர் நடவடிக்கைகளில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. நான் தலையிடவும் இல்லை. டெண்டர் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள் ளப்பட்டவை.
டெண்டர் விதிமுறை கள் முறையாகப் பின் பற்றப்பட்டுள்ளதா, டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் ஆவணங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டுள்ளதா, உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தற்போது எழுந்துள்ள புகாரை விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, விதிமீறல் ஏதேனும் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த டெண்டர் விவகாரத்தில் ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என பணம் கொடுத்துள்ளதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றதும், உண்மைக்கு புறம்பானதுமாகும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை வெளியிடட்டும்.
மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் எந்தவித முறைகேடும் இன்றி, வெளிப்படை யாகவும் விதிமுறைகளின்படியும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. மக்களின் நலன் சார்ந்த எந்தத் திட்டத்திலும் முறைகேடு இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்''’என்றார்.
இந்நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி விருதுநகரில் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும், அதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவியுள்ள நிலையில், இந்த டெண்டர் விவகாரத்தை உயர் நீதிமன்றம் வரை உதயா மகளிர் சுய உதவிக்குழு கொண்டு சென்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)