Politics
இது பட்டாம்பூச்சி மாதம்

மதுரை: செப்டம்பர் மாதம் பட்டாம்பூச்சி மாதமாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மதுரை அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது:
பட்டாம்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப். மாதம் பட்டாம்பூச்சி மாதமாக, இந்தாண்டு ‘நடை, கவனி, பதிவு, பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பட்டாம்பூச்சிகளைப் பார்வையிட்டு ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் செப். மாதம் பட்டாம்பூச்சிகளைக் கண்காணிக்க ஏற்ற காலம். பருவமழைக்குப் பிந்தைய தாவர வளர்ச்சி, பூக்கள், வானிலை ஆகியவை பட்டாம்பூச்சிகளின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.
இந்தியாவில் 1300க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. இது உலகின் மொத்த இனங்களில் 10 சதவீதம். மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு இந்தியா, கிழக்கு இமயமலைப் பகுதிகள் ஆகியவை அரிய வகை, உள்ளூர் இன பட்டாம்பூச்சிகளை காணும் இடங்களாக உள்ளன. குறிப்பாக அருணாச்சல், சிக்கிம், மணிப்பூர், மேகாலயாவில் 700 இனங்களும், தமிழகத்தில் செவ்வந்திச் சிறகன், மஞ்சள் வசீகரன், நீல வசீகரன், நீல வரியன் உள்ளிட்ட 329 இனங்களும் உள்ளன.
பட்டாம்பூச்சிகள் அழகியலை வெளிப்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் முக்கிய குறியீடாகவும் உள்ளதால் பட்டாம்பூச்சி வாழிடங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.