சாலையோரம் ‘கண்டம்’; விபத்துக்கு வழி வகுப்பதால் கண்டனம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் -– சிறுமுகை சாலையோரம், ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய உடைந்த வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; பொதுமக்களுக்கான சிரமமும் அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம் -– சிறுமுகை சாலையில், சங்கர் நகர் பகுதியில், பழைய இரும்பு மற்றும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், அருகில் உள்ள சிராஜ் நகர், எல்.ஐ.சி., காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் உள்ளன. மார்க்கெட்டுக்கு வரும் பழைய மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்து உதிரி பாகங்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன. இதற்காக சிலர் வாகனங்களை சாலையோரம் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்குள்ள சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரட்டு மேடு வனப்பகுதியின் அடிவாரத்தில், பழைய, உடைந்த வாகனங்களின் கடைகள் செயல்படும் நிலையில், அங்கும் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சிறுமுகை வனச்சரகர் தினேஷ் கூறியதாவது:
கரட்டுமேடு வனப்பகுதியில் பழைய உடைந்த வாகனங்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து, சமீபத்தில் அங்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது அங்குள்ள கடைகள் பட்டா நிலத்தில் செயல்படுவது தெரியவந்தது. வருவாய் துறை வாயிலாக நில அளவையர்கள் கொண்டு அளவீடு செய்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. ஆனால், வனப்பகுதி எல்லையோரம் வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது என, கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், ‘‘பொதுமக்கள் நலன் கருதி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உடைந்த வாகனங்களை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.---