Lifestyle and human interest
20 நாளுக்கு முன் அமைத்த தார் சாலை நாசம்: மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தி

செம்பாக்கம்: குரோம்பேட்டை நெமிலிச்சேரியில், 20 நாட்களுக்கு முன் அமைத்த தார் சாலையை தோண்டி, அப்பகுதியில் சிறுபாலம் கட்டும் மாநகராட்சி அதிகாரிகளின் செயலால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, நெமிலிச்சேரியில், கண்ணம்மாள் நகர் உள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உடைய இப்பகுதி நேரு தெருவில், 20 நாட்களுக்கு முன், மாநகராட்சி நிர்வாகம் தார் சாலை அமைத்தது.
இந்நிலையில், பிள்ளையார் கோவில் பூங்கா அருகே, நேரு மற்றும் வாஞ்சிநாதன் தெருக்கள் சந்திப்பில் சிறுபாலம் கட்டுமான பணிக்காக, புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டி, பள்ளம் எடுக்கப்பட்டு உள்ளது
மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிடாததால், மக்களின் வரிப்பணத்தில் போடப்பட்ட சாலையை தோண்டி வீணாக்குவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக சாலை அமைத்த 20 நாட்களில், அதை தோண்டி நாசப்படுத்தி, சிறுபாலம் கட்டி வருகின்றனர். இப்பணியை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால், பாலம் கட்டிய பின் சாலை போட்டிருக்கலாம்.
தாரின் விலை, கிலோ 110 ரூபாய்க்கு விற்கும் நிலையில், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் புதிய சாலையை தோண்டி, மக்களின் வரிப்பணத்தை நாசப்படுத்திய அதிகாரிகள் மீது, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியப்பணிக்கு விடிவுகாலம் வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பம்மல் – திருநீர்மலை சாலை, சங்கர் நகர் பவானி அம்மன் கோவில் அருகே, சாலையில் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இச்சாலை அமைத்து ஓராண்டுகூட முடியாத நிலையில், பள்ளம் தோண்டியதால், அப்பகுதிமக்கள் அதிருப்தி அடைந்தனர்.