Lifestyle and human interest
கோடிகள் ஒதுக்கியும் மாறாத நதி; தனி ஒருவனாக மீட்ட 20 வயது இளைஞன்- தூங்கும் அதிகாரிகளுக்கு சாட்டையடி

அரசாங்கமும், உள்ளூர் நகராட்சி அதிகாரிகளும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியைச் சுத்திகரிப்புத் திட்டங்கள் என்ற பெயரில் ஒதுக்கியும், இந்தியாவின் பெரும்பாலான நீர்நிலைகள் இன்னும் சாக்கடைகளாகவே காட்சியளிக்கின்றன. ஆனால், மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில், பிட்டு தபாஹி என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்படும் சுரேந்திர சிங் சௌத்ரி என்ற 20 வயது கல்லூரி மாணவன், அரசாங்க அமைப்புகளின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பல ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் கழிவுகள், வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பாசிகளால் மூடப்பட்டு அசுத்தமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த அஜ்நார் நதியை தனி ஒருவனாக மீட்டுள்ளார். கடந்த குடியரசு தினத்தன்று எவ்வித நவீன இயந்திரங்களோ, முறையான நீச்சல் திறமையோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி, வெறும் கைகளுடன் இந்த இளைஞர் அசுத்தமான நதியில் இறங்கினார். தொடக்கத்தில் இவருடன் இணைந்த நண்பர்கள் நதியின் துர்நாற்றம் மற்றும் சேறு காரணமாகப் பாதியிலேயே ஓடிவிட்டனர். ஆனால், பிட்டு பின்வாங்காமல் தனி ஆளாகத் தனது பணியைத் தொடர்ந்தார்.
குப்பை பைகள் மற்றும் கூடைகள் வாங்குவதற்காகத் தனது சொந்தப் பணத்திலிருந்து சுமார் 30,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார். நதியிலிருந்து அள்ளப்பட்ட மட்கும் ஆன்மீகக் கழிவுகளை வீணாக்காமல், அவற்றை இயற்கை உரமாக மாற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் காட்டியுள்ளார். அசுத்தமான நச்சுத் தண்ணீரில் தினசரி பல மணி நேரம் நின்று வேலை செய்ததால், பிட்டுவின் கைகள் மற்றும் கால்களில் கடுமையான தோல் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுத் தோல் உரியத் தொடங்கியது. அதுமட்டுமன்றி, உள்ளூர் மக்கள் பலர் இவரைக் 'பைத்தியக்காரன்' என்றும், சோசியல் மீடியாவில் பிரபலமாவதற்காக மட்டுமே இதைச் செய்கிறார் என்றும் கேலி செய்தனர்.
அத்தனை விமர்சனங்களையும் தாண்டி, அவர் தொடர்ந்து உழைத்ததால் அசுத்தமாகக் கிடந்த நதி, தற்போது பளிச்சென்று சுத்தமான நீரோடையாக மாறியுள்ளது. இந்த அசாத்திய மாற்றத்தின் வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பிட்டுவின் இந்தச் செயலைப் பாராட்டித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுப் பெருமைப்படுத்தினார். மத்தியப் பிரதேச முதலமைச்சரும் இவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தைச் சுருட்டிக்கொண்டு நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறும் அரசு அதிகாரிகளுக்கு மத்தியில், இந்த 20 வயது இளைஞனின் செயல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெரும் விழிப்புணர்வாகவும், தூங்கும் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சாட்டையடியாகவும் அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


