Lifestyle and human interest
தனி ஒருவனாக ஆற்றை சுத்தம்செய்த பிட்டு தபாஹி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு வேதனை

பிட்டு தபாஹி தூய்மைப்படுத்திய அஜ்னார் ஆற்றில் மீண்டும் பிளாஸ்டிக் குப்பைகள். இளைஞர் வேதனை. நெதர்லாந்து நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் இந்த சம்பவம்.
ஆற்றை தூய்மைப் படுத்தியதன் மூலம் மத்திய பிரதேசத்திலிருந்து உலகின் கவனத்தை ஈர்த்த இளைஞர், தற்போது மீண்டும் அந்த ஆற்றில் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் பையோராவில் உள்ள அஜ்னார் ஆறு குப்பை மற்றும் கழிவுகளால் அசுத்தமாக இருந்தது. இதனை, அப்பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி, தனி ஒருவனாக போராடி சுத்தம் செய்தார். இணையத்தில் பிட்டு தபாஹி எனும் பெயரில் வலம் வரும் அவரை, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நேரில் அழைத்து பாராட்டினார்.
இதற்கு ஒரு படி மேலே சென்று, நெதர்லாந்தை சேர்ந்த Ocean Cleanup என்ற நிறுவனம் பிட்டு தபாஹிக்கு வேலை கொடுத்தது. இப்படி இருக்க, அவர் நதியை தூய்மைப்படுத்தி பூஜை செய்வதற்காக பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த பொருட்களை சிலர் ஆற்றில் வீசியுள்ளனர். பிளாஸ்டிக் கேனையும் உடைத்து எறிந்துள்ளனர். இதனால் வேதனையடைந்த இளைஞர் பிட்டு தபாஹி, வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இளைஞரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்றாலும், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
