”மனதளவில் தயாராக இருக்க வேண்டும்”; மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கடந்த சில மாதங்களாகவே கர்நாடக அரசியல் தலைவர்கள், தங்கள் மாநிலத்தில் வறட்சி நிலவுவதாகக் கூறிவருகின்றனர். இதனிடையே, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் தொகுதியையும் வறட்சி பட்டியலில் சேர்க்குமாறு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (15-09-26) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டி.கே.சிவகுமார், “மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்சனைகளை சரிசெய்வதில் உங்களை விட எங்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. அதனால், இந்த சூழலை அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம்.
வறட்சி சம்பந்தமாக சில பகுதிகள் குறித்த அறிக்கைகள் தயாராகியுள்ள நிலையில், மீதமுள்ள சில பகுதிகளுக்கான அறிக்கைகள் தயார்செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை. இதனால், வறட்சி ஏற்பட்டதுடன், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மின்சார பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது மின்சாரத்தேவை 19 ஆயிரம் மெகா வாட்டைத் தாண்டியுள்ளது. அதனால், மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.11 முதல் ரூ.13 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் மனதளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாரம் மங்களூரில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பிறகே மேலும் அறிவிப்புகள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)