Economy, business and finance
தொழில் பங்கீட்டாளராக இணைய விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் இணைய சேவை வழங்கும் 'டேன்பி நெட்'டில் தொழில் பங்கீட்டாளராக இணைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களுக்கு உயர்தர இணைய சேவையை வழங்குவதற்காக மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை 'டேன்பி நெட்' (தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்) முன்னெடுத்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சமாக 2 தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 ஒன்றியங்களை கொண்ட துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த துணை பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 2 மாவட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஓ.எப்.சி., மற்றும் ஓ.என்.டி பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல், சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளாகும்.
விண்ணப்ப பதிவு நடைமுறை https://tanfinet.tn.gov.in என்ற டேன்பிநெட் இணையதளத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள், தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றி, செயல்பட விரும்பும் துணைப்பிரிவை தேர்வு செய்யலாம்.
ஒவ்வொரு துணைப்பிரிவுக்கும் 25 ஆயிரம் ரூபாய் (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வாகும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 2 லட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின் டேன்பிநெட் தலைமையகத்தால் பணி ஆணை வழங்கப்படும். இதில், ஏற்கனவே திருக்கோவிலுார் வருவாய் கோட்டத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் வரும் 10ம் தேதி மாலை 6:00 மணிக்குள் டேன்பிநெட் இணையதள மூலமாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை 044 - 24965595 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.