Politics
நியூஸ் பாக்ஸ்!
‘எதற்காக இந்த யாகம், பரிகார பூஜை?’ என சத்தியபாமாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, அவர்கள் புதுக்கதை சொன்னார்கள்.

ரூ.4 கோடி மோசடிப் புகார் சிக்கலில் சி.விஜயபாஸ்கர்..!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர் தன.விமல். தேர்தல் செலவுக்கான நிதி ரூ.5 கோடியைக் காட்டுமாறு, அன்றைய
அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கேட்டதாகக் கூறப்படுகிறது. `வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு பணம் திருப்பித் தரப்படும்’ என்ற வாக்குறுதியை நம்பி, 11.03.2026 அன்று ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசனின் அலுவலகத்தில்வைத்து ரூ.4.5 கோடியை தன.விமல் கொடுத்திருக்கிறார். ஆனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே தந்த விஜயபாஸ்கர் எஞ்சிய ரூ.4 கோடியைத் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறார் தன.விமல். அது மட்டுமின்றி, தன் தந்தைக்குச் சொந்தமான இடத்துக்கான ஆவணங்களை வாங்கிய விஜயபாஸ்கர், தன் ஆதரவாளர் ஒருவரிடம் அடமானம்வைத்து ரூ. 10 லட்சம் தருவதாகக் கூறியவரிடமிருந்து பணமும் வரவில்லை, ஆவணத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார். இது பற்றி காவல்துறையில் புகாரளித்தும் வழக்கு பதிவுசெய்யாததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி டி.எஸ்.பி பிருந்தா விசாரணை மேற்கொண்டதில், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் ஆடியோ பதிவுகளை தன.விமல் ஒப்படைத்திருக்கிறார். விஜயபாஸ்கர் தற்போது த.வெ.க-வில் இணைந்து புதுகோட்டை அமைப்புச் செயலாளராக இருக்கும் நிலையில், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சாதிப் பாகுபாட்டால் தடுமாறும் ஊராட்சி நிர்வாகம்!
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலூர் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும் தன்னால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்று புலம்புகிறார் கற்பகம் ஜானகிராமன். ‘பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், என்னுடைய அதிகாரத்தைப் பறித்துக்கொண்டிருக்கும் துணைத் தலைவர், தன்னிச்சையாக ஊராட்சி மன்ற நிர்வாகத்தை நடத்துகிறார். ஊராட்சிப் பகுதியில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டியைப் பராமரித்து, தண்ணீர் திறந்துவிட, ஊராட்சி சார்பில் மூவர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஏழுமலை. அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இதனால், ஊராட்சி நிர்வாகத்தைத் தன் கையில் வைத்திருக்கும் துணைத் தலைவர், அவருக்கு மட்டும் சம்பளம் போட மறுத்துவருகிறார். இது குறித்து யாராவது கேட்டால், ‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஊராட்சி மன்ற உதவிகளை அளிக்க முடியாது’ என்று வெளிப்படையாகச் சொல்கிறார். அது மட்டுமல்ல, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு மின்விளக்குப் போடுவதற்கான நிதியையும் விடுவிக்காமல் இருக்கிறார். இதை யாரிடம் சொல்லி, எப்படித் தீர்வு தேடுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்’ என்று சொல்கிறார்.
எத்தனை காலத்துக்கு இதே போன்ற பிரச்னைகள் தொடருமோ?
சத்தியபாமா வெற்றிக்காக பரிகார பூஜை!
தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்தியபாமாவுக்காக யாகம் வளர்ப்பது, பரிகார பூஜை செய்வது எனத் தொகுதியே அதகளப்படுகிறது.
‘எதற்காக இந்த யாகம், பரிகார பூஜை?’ என சத்தியபாமாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, அவர்கள் புதுக்கதை சொன்னார்கள்.
‘`கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற சத்தியபாமா, த.வெ.க-வில் இணைய வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு, தொகுதிக்குள் கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. `வெற்றிபெற்று சென்னைக்குச் சென்ற இரு வாரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி மாறியிருக்கிறார். அதோடு, இரண்டே மாதங்களில் தேவையில்லாமல் இடைத்தேர்தலை வரவழைத்திருக்கிறார்’ என்று சொல்லி, மக்களில் பெரும்பாலானோர் சத்தியபாமா மீது கடுப்பு காட்டுகின்றனர். இந்தக் கடுப்பைப் போக்க என்ன செய்வது என்று தெரியாத அவருடைய ஆதரவாளர்கள், ஜோதிடர் அறிவுரைப்படி திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியபாமாவை வழிபடச் செய்ததோடு, அவருக்காக லட்சங்களைச் செலவு செய்து யாகம் நடத்தி, பரிகார பூஜை நடத்திவருகின்றனர். பரிகார பூஜையால் இந்த முறையும் சத்தியபாமாவே வெல்வார்’’ என்றனர்.
செய்யாத வேலைக்கு ஸ்டிக்கர் ஒட்டிய கனிமொழி!
கோவை துடியலூர் பகுதியில் நள்ளிரவில் சாலையில் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை அங்கிருந்த தெருநாய் விரட்டியடித்து, காப்பாற்றிய காட்சிகள் வைரலாகின. அந்தப் பெண்ணை மனநலக் காப்பகத்தில் சேர்ப்பதற்கு, கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஒரு பரிந்துரைக் கடிதம் தந்திருக்கிறார். அவரின் பரிந்துரைக் கடிதத்்தால் எந்தப் பயனும் இல்லை. பின்னர் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் முயற்சியால் அந்தப் பெண் வேறொரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால், கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ-வின் முயற்சியால்தான் அந்தப் பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டதாக த.வெ.க-வினர் செய்திகளையும் ரீல்ஸ்களையும் பரப்ப, அதைப் பார்த்து கொதித்துப்போன எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள், செய்தியாளர் சந்திப்பு வைத்து உண்மையை உடைத்துவிட்டனர். இதனால், கனிமொழி சந்தோஷ் தரப்பு துக்கத்தில் தவிக்கிறது.
