ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடிய இரண்டு பேர் கைது
ஆவடி: ஆவடி, அம்பத்துார், கெருகம்பாக்கம், பகுதிகளில், சாலையோரம் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடிய, இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த அண்ணனுார், ஜோதி நகரைச் சேர்ந்தவர் சவர்ராய், 65. கடந்த 13ம் தேதி, அண்ணனுார் ரயில்வே கேட் அருகே நிறுத்தியிருந்த அவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் திருடு போனது.
புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார், 'சி.சி.டி.வி.' காட்சிகளை ஆய்வு செய்து, சென்னை ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்த சூர்யா, 45, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், பட்டரவாக்கம், ஆவடி, அண்ணனுார், பட்டாபிராம், அம்பத்துார் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை நோட்டமிட்டு திருடியது தெரிந்தது. கியர் பைக் ஓட்ட தெரியாததால் ஸ்கூட்டர்களை மட்டும் திருடியுள்ளார்.
திருடிய வாகனங்களை மெக்கானிக்கிடம் பழுது பார்க்க கொடுப்பது போல் கூறி, விற்று பணம் சம்பாதித்துள்ளார். அவரிடம் இருந்து ஒரு 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் ஐந்து டி.வி.எஸ்., எக்ஸல் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கெருகம்பாக்கம், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் திவாகர், 30. கடந்த 14ம் தேதி நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு குடும்பத்துடன், 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனம் திருடுபோனது. விசாரித்த நந்தம்பாக்கம் போலீசார், ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த கணேஷ், 42, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.