Politics
2 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி?- கட்சியை விட்டு நீக்கி விட்டதாக திமுக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரராகவும், திமுக பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளவர் வி.டி.சிவகுமார். இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதும் அவரது மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரான கதிர் ஆனந்த் மீது கட்சித் தலைமைக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளார்.
அதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ஒப்பந்தப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியும், மேலும் இவரது மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் எனது மனைவிக்கு ஒன்றியக் குழு தலைவர் பதவி மற்றும் தொகுதி நிதியில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 25 லட்சத்தை லஞ்சமாக பெற்றார். ஆனால் எனக்கு ஒப்பந்தப் பணியும் வாங்கி தரவில்லை மனைவிக்கு பதவியும் வாங்கித் தரவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டால் பல காரணம் கூறி தட்டிக் கழிக்கிறார்கள். ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி, வி.டி.சிவகுமார் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக அண்ணா அறிவாலயத்தில் இருந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)