Politics
‘மறு சீரமைப்பு பணிகள் எப்போது முடியும்?’ தி.மு.க.,செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த தி.மு.க.,செயற்குழு கூட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் எப்போது முடியும் என்று நிர்வாகி கேட்டதால் ‘திடீர்’ சலசலப்பு ஏற்பட்டது.
சங்கமித்ரா திருமண மண்டபத்தில், நேற்று மாலை 6:00 மணியளவில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனம் சட்டசபை தொகுதிக்கான செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், மறுசீரைமப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்சி மேலிட பிரதிநிதிகளான புதுச்சேரி மாநில தி.மு.க.,அமைப்பாளர் சிவா,மாநில மாணவரணி செயலாளர் வீரமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் ஏற்கனவே விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்த திண்டிவனம் சட்டசபை தொகுதி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக உள்ள லட்சுமணன் பொறுப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்சி தலைமை அறிவுறுத்தலின் படி தற்போதுள்ள மாவட்ட செயலாளர் மஸ்தான் முன்னிலையில், திண்டிவனம் தொகுதியிலுள்ள நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளை ஆகியவற்றை மறுசீரமைக்கும் பணிகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து மரக்காணம் ஒன்றியத்தில் தற்போதுள்ள மேற்கு, மத்திய ஒன்றியம்,கிழக்கு ஒன்றியம் என மூன்றாக இருப்பதை நான்கு ஒன்றியங்களாக பிரிக்கப்படும்.
அதே போல் ஒலக்கூர் கிழக்கு ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பது, திண்டிவனம் நகரத்தை இரண்டாக பிரித்து இரண்டு நகர செயலாளரை போடுவது, என அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், நகர தி.மு.க.,இளைஞரணி பிரமுகர் இலியாஸ் பேசும் போது, ‘ஏற்கனவே கட்சி சார்பில் பல தடவை மறுசீரமைப்பு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை.
தற்போது நடத்தப்படும் மறுசீரமைப்பு பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை. நீங்கள் மறுசீரமைப்பு பணிகள் முடிப்பதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும்.
அதனால் மறுசீரமைப்பு பணிகள் எப்போதும் முடியும் என்று கூட்டத்தில் அறிவியுங்கள்’ என்று கூறியதால், கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இலியாஸ் கருத்திற்கு தி.மு.க.,தொண்டர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்ததால் கைதட்டி வரவேற்றனர்.
இதற்கு மேலிட பொறுப்பாளர் வீரமணி பேசும் போது, ‘‘ மறுசீரமைப்பு பணிகள் ஒரு நாளில் முடிவடையலாம் அல்லது 2 ஆண்டுககள் கூட ஆகலாம். கட்சி தலைமை மறுசீரமைப்பு பணிகளை முடிப்பதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்யவில்லை’’ என்று பதில் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, தயாளன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரமணன் நன்றி கூறினார்.
