Politics
நேரு... அடுத்தது யாரு?

"தளபதிகிட்ட வெறும் டயலாக் மட்டும் இல்லைங்க; ஆக்ஷனும் இருக்கும். இப்ப பாத்திங்களா நேருவோட நிலைமை யை?'' என த.வெ.க.வினர் மகிழ்ச்சியில் விசில் அடிக்க "அடுத்து யாராக இருக்குமோ?'' என்ற மிரட்சியில் இருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
"கடந்த இரு வாரங்களுக்கு முன், என் மேசையில் எதிர்க்கட்சியினர் தொடர்பான மூன்று கோப்புகள் தயாராக இருக்கின்றன; நேரம் வரும்போது அவற்றைத் திறப்பேன்' என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கூறியது வெறும் அரசியல் எச்சரிக்கையாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், "கோப்புகளை வைத்துக்கொண்டு மிரட்டல் அரசியல் வேண்டாம்... இருந்தால் உடனே ஓபன் செய்யுங்கள்'’என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து, அடுத்த சில தினங்களிலேயே முன்னாள் அமைச்சர் நேரு வீட்டின் கதவைத் தட்டியது லஞ்ச ஒழிப்புத்துறை.
ஏற்கனவே, "சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது' என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கும் நிலையில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடந்த அந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேருவின் தம்பி ரவிச்சந்திரன், நம்பிக்கைக்குரிய உதவியாளர் மணிகண்டன், மாநகராட்சி அதிகாரி சிவபாதம் என இவர்கள் தொடர்புடைய 19 இடங்களில் நடந்த ரெய்டில் மொத்தம் 241 ஆவணங் களையும், மின்னணு உபகரணங்களையும் கைப்பற்றி இருக்கிறோம் என்று சொன்னது லஞ்ச ஒழிப்புத்துறை. ஆனால், "நாலஞ்சு பேப்பரை மட்டும் ஜெராக்ஸ் எடுத்துட்டு போனாங்க..' எனக் கூறினார் நேரு. ரெய்டு நடப்பதை கேள்விப்பட்ட உடனேயே, "ஒருத்தருக்கு ஒன்னுனா விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்றபடியே நேரு வீட்டில் ஆஜரானார் அவரின் அரசியல் எதிரியாக சித்தரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இந்த ரெய்டு திடீரென நடந்ததுபோல இருந்தாலும் அது நடப்பதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பே அலர்ட் செய்யப்பட்டி ருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். ஏற்கனவே, தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடப்பதற்கு முன்பே அது தொடர்பான தகவல் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை எடுத்து இம்முறை ரொம்பவே உஷாராக இருந்தனர் அதிகாரிகள். அதன்படி திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை என ரெய்டு நடந்த அத்தனை இடங்களிலும் ரெய்டு துவங்கிய பிறகுதான் அங்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.களுக்கு தகவலே தரப்பட்டிருக்கிறது. இதற்காக, குறிப்பிட்ட அந்த மாவட்டத்தை சேராத வேறு மாவட்ட அதிகாரிகளை வைத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, திருச்சியில் உள்ள நேருவின் வீட்டில் பெரம்பலூர் டி.எஸ்.பி. ஹேமச்சந்திரா தலைமையில் களம் இறங்கியது விஜிலென்ஸ் டீம்.
ரெய்டு நடந்ததையடுத்து முன்னாள் அமைச்சர் நேரு, அவரது சகோதரர் ரவிச் சந்திரன், மற்றொரு சகோதரர் மணிவண்ணன், அவரது உதவியாளர் மணிகண்டன் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேரு மீது அவர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தபோது 2020 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு உட்பட, பணியிடங் களுக்கு பணம் வசூலித்தது வரை குற்றச்சாட்டு கள் வைக்கப்பட்ட நிலையில், அதை குறிவைத்து களமிறங்கிய அவர்கள் அது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, 2004, 2011 காலகட்டங்களில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படும் நிலையில், தற்போது கிடைத்துள்ள ஆவணங் களின் அடிப்படையில் இம்முறை இறுக்கமாக முடிச்சு போட்டு முடக்கி விடுவோம் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
இப்படி, அரசியல் ரீதியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருக்கும் நேருவுக்கு நெருக்கடி தருவதை பார்த்து மற்றவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேச அச்சமடைவார்கள் என்பதுதான் த.வெ.க.வின் அரசியல் கணக்காகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் கூறிய மூன்று பைல்களில் ஒன்று ஓபன் ஆயிடுச்சு. அடுத்தது யாருடையது? என்பதுதான் தி.மு.க. வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகி யிருக்கிறது.
த.வெ.க. ஆட்சிக்கு வந்த சில தினங்களி லேயே, முன்னாள் அமைச்சர் நேருவோடு சேர்த்து மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறையில் ஏகத்துக்கும் ஊழல் செய்து சில ஆயிரம் கோடிகளை சுருட்டி விட்டார் என செந்தில் பாலாஜி மீதும், அறநிலையத் துறையில் நடந்த அறங்காவலர் நியமன முறைகேடு, கணக்கில் வராத தேர்தல் நிதி வசூலித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் பல கோடிகளை பார்த்து விட்டார் என மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மூர்த்தி மீதும் பரபரப்பாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
அதன்படி, அடுத்த குறி யாருக்கு என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் பனையூருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். "நீங்க சொல்றது மாதிரி நாலு பேர் மேல அந்த குற்றச்சாட்டு இருந்தாலும், "அதை யெல்லாம் அவங்க பாத்துப்பாங்க' எனக்கூறி கொங்கு மண்டல புள்ளி சம்பந்தமான பைலை மட்டும் தனியாக எடுத்துவைக்கச் சொல்லி விட்டார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
தவிர, "பெரியவரை கடைசியா பார்த்துக்க லாம்' என கூறிவிட்டார் முதல்வர் விஜய். ஆகவே, அடுத்தது யார் என்கிறது உங்களுக்கே புரியும்'' என்ற அவர்கள், இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தி.மு.க.வின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் முக்கிய அசைன் மெண்டில் சில முன்னாள் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். ஒருவேளை, அவர்களிடமிருந்து கிடைக்கும் தரவுகள் போதுமானதாகயிருந்தால், அங்கேயும் கூட அடுத்த அம்பு பாயலாம். இதுதான் தற்போதைய நிலவரம் என்றபடியே நடையைக் கட்டியிருக் கிறார்கள் அவர்கள்.
தற்போது, இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், அறிவாலயத்தின் நிலவரம் அறிய தி.மு.க. மூத்த புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
"ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தேன் கலைஞர், அதாவது கலைஞரைவிட ரொம்பவே ஆபத்தானவர் ஸ்டாலின் என்று கூறுவதைப் போல "உதயநிதி இஸ் மோர் டேஞ்சரஸ்தேன் ஸ்டாலின்' என்பதை விரைவில் உணர்ந்து கொள்வார் விஜய்'' என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டனர் அவர்கள்.
ரெய்டு பின்னணி..!
"ஏன், இந்த திடீர் ரெய்டு? பின்னணி என்ன?' என்பது குறித்து விசாரித்தபோது, "நேருக்கு எதிரான இந்த ரெய்டுகளுக்கான திட்டமிடல் களை தொடங்குவதற்கு முன்பு, அரசின் உயரதிகாரிகளோடு ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், ரெய்டு நடத்த உத்தர விடுகிறார். அப்போது, ஏற்கனவே அமலாக்கத்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் ரெய்டு நடத்தி யிருக்கிறது. அமலாக்கத்துறை நடத்திய ரெய்டின்போது கிடைத்த ஆவணங்களைத் தாண்டி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்த ஆதார ஆவணங்களும் கிடைக்கவில்லை.
"அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகே கே.என்.நேரு உள்ளிட்ட தி.மு.க.வினர் உஷாராகி விட்டனர். அதனால் தான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதுவும் கிடைக்கவில்லை.
மீண்டும் ரெய்டு நடத்தினாலும் எதுவும் சிக்கப்போவதில்லை' என அதிகாரிகளில் சிலர் கூறியிருக் கிறார்கள்.
ஆனால், முதல்வரின் செய லாளர்களோ, "பணி நியமனங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்துத்தான் ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், டெண்டர்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன; பார்ட்டி ஃபண்ட் கலெக்ட் செய்யப்பட்டுள்ளது' என அமலாக்கத்துறை குற்றம்சாட்டி யிருக்கிறது.
அதனால் டெண்டர் முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனை மையப்படுத்தி ரெய்டு நடத்தலாம். நிச்சயம் இதற்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்டவர் களின் வீடுகளில் இருக்க வாய்ப்பில்லைதான்.
ஆனால், நம்பிக்கைக்குரிய வர்களின் இடங்களில் ஆதா ரங்கள் பதுக்கப்பட்டிருக்கலாம். கடந்த ஒரு மாதமாக கண்காணித்ததில், இதுவரை ரெய்டு நடத்தப்படாத சில இடங்கள் நமக்கு கிடைத்திருக் கிறது. அதனை குறி வைத்து நடத்தலாம். அந்த இடங்களில் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு என அவர்கள் விவரித்துள்ளனர். இதன் பிறகே ரெய்டுக்கு திட்டமிடப்பட்டது''” என்கிறது கோட்டை வட்டாரம்.
இறுதிச்சுற்று!
அமைச்சர் கார் மோதி இளைஞர் மரணம்!
சென்னையை அடுத்த காட்டாங்குளத் தூர் பகுதியில், தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி யின் கார் மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 7-ஆம் தேதி அமைச்சர் ஜெகதீஸ்வரி காரில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அரசு வாகனத்தில் முன்னால் செல்ல, அவருக்குப் பின்னால் பாதுகாப்பு எஸ்கார்ட் வாகனமும், அதற்குப் பின்னால் அமைச்சரின் சொந்த வாகனமும் அணிவகுத்து வந்துள்ளன. வாகனங்கள் காட்டாங்குளத்தூர் சந்திப்புப் பகுதியைக் கடந்தபோது, அமைச்சருக்குப் பின்னால் வந்த அவரது சொந்த வாகனமான மாருதி எர்டிகா கார், எதிர்பாராதவிதமாக ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இறையன்பு என்ற 26 வயது இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)