Politics
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து... 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் அதில் பங்கேற்பதாக கார் மூலமாக சென்னை வந்திருக்கிறார். இன்று அதிகாலை சென்னை வந்து கொண்டிருந்தபோது அவரது சொந்த வாகனம் இரு சக்கர வாகனத்துடன் விபத்தில் சிக்கியது.
இந்த இரு சக்கர வாகனத்துடன் ஏற்பட்ட விபத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இளைஞர் பெயர் இறையன்பு என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை விடுமுறையின் காரணமாக தொகுதிக்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் வந்த நிலையில் அவருக்கு முன்னால் எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமும், கடைசியாக அவரின் சொந்த வாகனமும் வந்திருக்கிறது. இதில் மூன்றாவதாக வந்த அவரது சொந்த கார் சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்திருக்கிறார்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. கார் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றும் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
