மனைவியின் காதலனுக்கு கத்திக்குத்து.. மன உளைச்சலில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்

ஆம்பூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை. கள்ளக்காதலன் வசந்த்குமார் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை கணவன் கத்தியால் குத்தி இருக்கிறார். மனைவியால் மன உளைச்சலில் இருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன், ஆம்பூரில் உள்ள ஸ்டிக்கர் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு காவ்யா என்பவருடன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாலசந்திரனின் மனைவி காவ்யாவுக்கும், மின்னூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வசந்த்குமாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
வசந்த்குமாருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்தவர் மனைவியுடனான பழக்கத்தை பாலசந்திரன் கண்டித்துள்ளார். ஆனால், வசந்த்குமார் தொடர்ந்து காவ்யாவுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலசந்திரன், வாணியம்பாடியில் இருந்து மின்னூர் நோக்கி ஆட்டோவில் சென்ற வசந்த்குமாரை மின்னூர் சிப்காட் பகுதியில் வழிமறித்துள்ளார். இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், வசந்த்குமார் தப்பியோட முயன்றுள்ளார்.
அப்போது ஆட்டோவை சாலையோர பள்ளத்தில் கவிழ்த்த பாலசந்திரன், வசந்த்குமாரை சாலையில் துரத்திச் சென்று தாக்கியுள்ளார். பின்னர் வசந்த்குமாரை பிடித்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் வசந்த்குமார் மற்றும் பாலசந்திரன் இருவரும் காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வசந்த்குமாரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலசந்திரனும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த பாலசந்திரன், சான்றோர்குப்பத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, பாலசந்திரன் உயிரிழந்த தகவலை அறிந்த வசந்த்குமார், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தப்பியோடி விட்டார். அவரை தேடிய ஆம்பூர் கிராமிய போலீசார், வசந்த்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், கணவனின் தற்கொலை மற்றும் கள்ளக்காதலன் கைது என ஆம்பூர் பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
