Lifestyle and human interest
போதை பொருள் கடத்திய மாணவி உட்பட 2 பேர் கைது

திருவனந்தபுரம்: டில்லியில் இருந்து தமிழகம், கேரள மாநிலங்களுக்கு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்திய நர்சிங் மாணவி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பந்தீரம்காவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மே மாதம் ஒரு கிலோ எம். டி. எம். ஏ. போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக முகமது பர்ஹான் என்பவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் டில்லியில் இருந்து எம்.டி.எம்.ஏ. சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டில்லியில் இருந்து போதை பொருள் அனுப்பும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
தனிப்படையினர் டில்லியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் டில்லி அருகே நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் கும்பல் தங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு சோதனை நடத்திய போது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த முகம்மது அஜ்மல் 32, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சூர்யா 23, கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தமிழகம், கேரளம், கர்நாடகா மாநிலங்களுக்கு வாரம் தோறும் 10 கிலோ வரை எம். டி. எம். ஏ. சப்ளை செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து எம். டி. எம். ஏ. எடை போடுவதற்கான டிஜிட்டல் தராசு, பணம் எண்ணும் இயந்திரம், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை கைப் பற்றப்பட்டன.
அவர்கள் பல கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. சூர்யா டில்லியில் நர்சிங் படித்து வருகிறார்.
இருவரும் கோழிக்கோடு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.