பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிவால் தீ விபத்து

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று காலை பள்ளி சத்துணவு கூடத்தில் வழக்கம்போல் சமையல் பணி நடந்தது. அப்போது சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு காஸ் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது.
இதனால் அடுப்பு முழுவதும் தீ பரவிய நிலையில், சமையலர் மற்றும் உதவியாளர் அலறி அடித்து வெளியேறினர். தீயணைப்பு வாகனம் வர தாமதம் ஏற்பட்டது.
அவ்வழியாக வந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீரில் நனைத்த சணல் சாக்கு உதவியுடன் தீயை அணைத்து, சிலிண்டர் ரெகுலேட்டரை ஆப் செய்தனர்.
சில நிமிடங்களில் பரவிய தீயால் சமையல் கூடத்தில் இருந்த மின் உபகரணங்கள் சேதமடைந்தன. சிலிண்டர் வெடிக்கும் அபாயத்தில் இருந்து பாதுகாத்த தீயணைப்பு அலுவலர்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.