பரமக்குடி, மானாமதுரைக்கு பஸ் இல்லை தொலைதுார பஸ்களும் நிறுத்த மறுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்கள் இடை நிறுத்தங்களில் நிற்காததால் மக்கள் அவதியடைகின்றனர். தொலைதுார பஸ்களையும் 1 டூ 1 என விதிகளை மீறி இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, மானாமதுரைக்கு தனியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் 1 டூ 1 என பெயரிட்டு இடை நிறுத்தங்களில் நிற்காமல் செல்கின்றனர்.
இதை தவிர்த்து பிற பஸ்கள் அனைத்தும் பரமக்குடி, மானாமதுரை ஆகிய முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தேனி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் சில பஸ்கள் ராமநாதபுரத்திற்கு அடுத்து மதுரையில் தான் நிற்கின்றன.மதுரைக்கு செல்லும் சாதாரண பஸ்கள் போதிய அளவில் இயக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம் 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்து பஸ் வசதி இல்லை.
எனவே ராமநாதபுரம்-பரமக்குடி, ராமநாதபுரம் -மானாமதுரை வரையிலாவது குறிப்பிட்ட அளவில் பஸ்களை இயக்க வேண்டும். அதுபோல் இயக்காததால் முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மதுரை வழித்தடத்தில் 1 டூ 1 பஸ்கள் மட்டும் தான் வரிசையாக நிற்கின்றன. பண்டிகை நாட்களில் பரமக்குடி, மானாமதுரை செல்வதற்கு நுாறுக்கும் மேற்பட்ட மக்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்கின்றனர்.
தேனி செல்லும் பஸ்களும் இடையில் நிற்காது என்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள அட்டவணைப் படி பஸ்கள் வருவதில்லை.
தகவல் தெரிவிக்க போக்குவரத்து பணியாளர்களும் இல்லை. இதனால் வயதானோர், கர்பிணிகள் நீண்ட நேரம் உட்கார இடமின்றி காத்திருக்கின்றனர். பரமக்குடி, மானாமதுரையில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.