Politics
பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது! ராமேஸ்வரம் கோயில் பின்னணியில் தலைவர்களை வரவேற்கும் பிரதமர் மோடி!!

புது தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு தொடங்கியது, உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இருநாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு வருகை தந்த முக்கிய நாடுகளின் தலைவா்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
உச்சி மாநாடு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயிலில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலின் பிரகார புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் நின்றுதான், பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களை வரவேற்றார்.
உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் உச்சி மாநாடு தலைநகர் புது தில்லியில் இன்று முதல் இரு நாள்கள் நடைபெறுகிறது.
இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. ஏற்கெனவே 3 முறை இப்பொறுப்பை இந்தியா வகித்துள்ளது. இந்தியா ஏற்பாட்டின்பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு, தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.
உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் 40 சதவீதம் கொண்டுள்ளன. உலக வா்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 26 சதவீதம் ஆகும்.
பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் நட்பு நாடுகளாக பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகியவை உள்ளன.
மாநாட்டின் முதல் நிகழ்வாக, ‘அனைவரையும் உள்ளடக்கிய சா்வதேச நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் இடையே ஆலோசனை கூட்டம் தொடங்கவிருக்கிறது.
அது நிறைவு பெற்றதும் பாரத் புத்தாக்க கண்காட்சியை உலகத் தலைவா்கள் பாா்வையிடுகின்றனா்.
பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த முக்கிய நாளின் நினைவாக, தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெறுகிறது. முதல்நாள் நிகழ்வு தலைவா்களுக்கு பிரதமா் மோடி அளிக்கும் இரவு விருந்துடன் நிறைவு பெறுகிறது.
BRICS Summit begins Modi welcomes leaders Rameswaram temple background
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.