Politics
மேட்டூர் செல்ல 6 கோடி; காலை உணவுத் திட்டத்தை சீரமைக்க பணம் இல்லையா?-கேள்விகளால் விளாசும் இள.புகழேந்தி

தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. இவர்களின் பிறந்தநாள் விழாக்கள் தமிழகத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படும் வேளையில், அதற்குத் தடை விதிப்பதும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களில் குளறுபடிகள் ஏற்படுவதும் தற்போதைய ஆட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"தமிழக மக்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாக்களைத் தடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தத் தலைவர்களின் பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் கல்வி உதவிகள் வழங்குவது வழக்கம்.
அதனைத் தடுக்கும் இந்த விஜய் அரசு, உண்மையில் ஒரு ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி பின்னணி கொண்ட அரசு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காவி மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளைத் தலைமறைவாக இருந்து கொண்டு விஜய் கட்சி செயல்படுத்துகிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளம் இது. அடுத்ததாக, மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கச் செலவுகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்தச் செலவில் ஏற்க வேண்டும் என்று இந்த அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, உலக அளவிலும் கனடா நாட்டிலும் பாராட்டப்பட்ட இந்த உன்னதமான காலை உணவுத் திட்டத்தைச் சீர்குலைக்க விஜய் அரசு சதி செய்கிறது.
இத்திட்டத்தின் செலவுகளை அரசு ஊழியர்கள் மீது திணித்து, திட்டத்தைத் தொய்வடையச் செய்து, 'அவர்கள் சரியாகச் செய்யவில்லை' என்று பழிபோட்டு திட்டத்தையே நிறுத்தப் பார்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி/எஸ்டி சமூகக் குழந்தைகள் படித்து முன்னேறுவதைத் தடுப்பதுதான் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. அதே கொள்கையைத்தான் விஜய்யின் கட்சியும் கையில் எடுத்துள்ளது. மேட்டூர் அணையைத் திறக்க கார் மூலம் செல்லாமல், தனி விமானத்தில் சென்று 6.5 கோடி ரூபாய் அரசுப் பணத்தை வீணடித்த முதலமைச்சர் விஜய்க்கு, ஏழைப் பிள்ளைகளின் காலை உணவுக்கு நிதி இல்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையைக் கூட ஒழுங்காக வழங்காமல், மக்கள் நலத்திட்டங்களை முடக்க நினைக்கும் விஜய்யின் இந்த ஆர்எஸ்எஸ் பாணி கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியதால்தான், தற்போது இந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்று ரிவர்ஸ் கியர் போட்டுள்ளனர்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)