சிறுவனின் உடலை வாங்க மறுத்து கும்மிடி காவல் நிலையம் முற்றுகை
கும்மிடிப்பூண்டி, செப். 7– கும்மிடிப்பூண்டியில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்த
கும்மிடிப்பூண்டியில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், உரிய இழப்பீடு கேட்டு, நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை, நேதாஜி நகரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரின் மகன் கவுசிக், 12. நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் மின் கோபுர கம்பத்தில் இருந்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
அரசின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உரிய இழப்பீடு கேட்டு, நேற்று கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார், காவல் நிலையத்திற்கு சென்று, உயிரிழந்த சிறுவனின் உறவினர்களுடன் சமரச பேச்சு நடத்தினார்.
இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற கோரிக்கை குறித்து, கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., விஜயகுமார் உறுதியளித்தார். அதை தொடர்ந்து, சிறுவனின் உடலை பெற சம்மதம் தெரிவித்து, அனைவரும் கலைந்து சென்றனர்.