கும்மிடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் மின்கோபுர கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து, 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை நேதாஜி நகரைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி மணி மகன் கவுசிக், 12; ஆறாம் வகுப்பு மாணவன். நேற்று மாலை, வீட்டருகே உள்ள கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு விளையாட சென்றார்.
அப்போது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அங்குள்ள பழைய புறநோயாளி பிரிவு கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள உயர் மின்கோபுர விளக்கு கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக கம்பத்தை தொட்ட சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே கவுசிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில நாட்களாக, அந்த கம்பத்தில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த தாசில்தார் பாலாஜி மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர்.
அதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.