பழநியில் 3 அரசு பஸ்கள் ஜப்தி
பழநி:மதுரை பேரையூர் சேர்ந்தவர் கவிநேசன் 20. இவரது குடும்பத்தினர் பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு சென்றனர். அவர்களுடன் வந்த கவினேசன் 2023 பிப்.,5ல் டூவீலரில் ஆயக்குடி அருகே திண்டுக்கல் ரோட்டில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் இறந்தார்.
இதையடுத்து கவிநேசன் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு பழநி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2025 ஏப்.,ல் விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.28 லட்சத்து 5 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்காததால் பழநி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி மலர்விழி, வட்டியுடன் இழப்பீட்டு தொகையாக ரூ.34 லட்சத்து 56 ஆயிரத்து 107 வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் நீதிமன்றம் உத்தரவின்படி, பழநி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த 3 அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.