இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
ராஜபாளையம் தாலுகா சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் மாத்தூரான் 56, நெசவுத் தொழிலாளி. இவர் 2021 ஏப்.26ல் ராஜபாளையத்தில் இருந்து ஊருக்கு டூவீலரில் திரும்பும் போது, பின்னால் வந்த அரசு பஸ் மோதி காயமடைந்தார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதனை மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் அவருக்கு வழங்கவில்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி மாத்தூரான் தொடர்ந்து வழக்கில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று காலை ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.