கஞ்சா கடத்திய கும்பலை விரட்டி பிடித்த போலீசார்

சேலம்: ஒடிஷாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை, சேலம் அருகே, சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்தனர்.
சேலம் வழியே கருப்பு நிற காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமாருக்கு, நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அவர் உத்தரவுப்படி, மாநகர் முழுதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இரவு, 7:00 மணிக்கு, ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச்சாவடி வழியே வந்த, 'எண்டோவர்' காரை நிறுத்த முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. போலீசார், அந்த காரை விரட்டினர்.
அயோத்தியாப்பட்டணம் அருகே, மர்ம நபர்கள் சென்ற காரில் இருந்து ஒரு மூட்டையை வீசிவிட்டு, பேளூர் நோக்கி சென்றனர். காரிப்பட்டி போலீசார், மூட்டையை பார்த்தபோது கஞ்சா இருந்தது. அதேபோல், ஏ.என்.மங்கலத்திலும் கஞ்சா மூட்டையை கைப்பற்றினர். தொடர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்த போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரை எடுக்க வந்த இருவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்கள் தகவல்படி, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருவர், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சோதனைச்சாவடியில் இருவரை போலீசார் பிடித்தனர். ஆறு பேரும், கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த அன்வர் ரிஷாத், 30, உள்ளிட்டோர் என்பதும், ஒடிஷாவில் இருந்து கேரளாவுக்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. அவர்களிடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 75 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.